கோலசிலாங்கூர், ஜன. 4-
கோவிட்-19 பெருந்தொற்றை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடத்தப் படாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மலேசியப் பாதுகாப்பு மன்றத்தின் முழு அறிவுறுத்தலைப் பின்பற்றி கோலசிலாங்கூர் 2 1/2 மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்தப்படும் என்று ஆலயத் தலைவர் கண்ணதாசனும் செயலாளர் நாராயணசாமியும் தெரிவித்தனர்.
அண்மையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பின் போது அவர்கள் அந்த தகவலைத் தெரிவித்தனர்.
அண்மையில் பத்துமலைத் திருத்தலத்தில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தலைமையில் பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியோடு பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி தைப்பூசத் திருவிழா உற்சவத்தை நடத்துவது குறித்து விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் முழு பாதுகாப்போடு தைப்பூசத் திருவிழா நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எல்லாவிதமான காவடிகள் எடுப்பதற்கும் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அதே போல் அலகு குத்துவதற்கு இம்முறை அனுமதி வழங்கப்பட வில்லை. முகக்கவசம் அணிய முடியாத காரணத்தால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பால்குடம், காவடி எடுப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆலயச் சுற்றுவட்டாரத்தில் கிட்டதட்ட 100 இடங்களில் மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
அதே போல் ரேலா மற்றும் தன்னார்வலர்கள் பணியில் இருப்பார்கள். ஆலயத்தில் அர்ச்சனை செய்வதற்காக ஒரு தடவைக்கு 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். எனவே எல்லா ஏற்பாடுகளும் பாதுகாப்பு அம்சங்களை முன்னிறுத்தியே தயார் செய்யப் பட்டுள்ளன.
இவ்வாண்டு 17ஆம் தேதி இரவு புக்கிட் ரோத்தான் ஸ்ரீ சக்திபுரம் ஆலயத்தில் இருந்து ரதம் புறப்படும். கிட்டதட்ட அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி 7 இடங்களில் ரதம் நிறுத்தி பூஜை செய்யப்படும் என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.
அதோடு மட்டுமின்றி இவ்வாண்டு 30,000 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் உடபட அவரது குழுவினருக்கு அன்னாதானப் பொறுப்பேற்ற தற்காக ஆலய நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புக்கு 019-2847796.


