பெட்டாலிங் ஜெயா, அக். 29-
வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றத்தைத் தருவதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவி தலைவர் தியான் சுவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தேர்தலில் பிகேஆர் சார்பில் தீபகற்ப நிலையில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு குறித்து அவர் இவ்விதம் கருத்துரைத்தார்.
இதைத் தவிர்த்து, சில தொகுதிகளில் நிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர்கள் குறித்து பெரும்பாலோர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தமது முகநூலில் அவர் சுட்டிக் காட்டினார்.
“சம்பந்தப்பட்ட தொகுதி மக்களிடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளவர்களே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது வேட்பாளர் தேர்வுக்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்” என்றார் முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான தியான் சுவா.
“நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதிகளும் மாற்றப்பட்டால் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது நம்மை விசுவாசமாக ஆதரித்து வரும் வாக்காளர்களுக்கும் இது ஏமாற்றத்தையே தரும்” என்றார் அவர்.


