ஷா ஆலம் , நவ.17-
வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் ஒதுக்க்டுகள் மற்றும் உதவிகள் யாவும் இத்தொகுதி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யப் போவதாக இத்தொகுதியில் தேசிய முன்னணியின் மஇகா சார்பில் போட்டியிடும் கஜேந்திரன் கூறுகிறார்.
நாடு மற்றும் இனத்தின் மேம்பாட்டிற்காக இளைஞர், மகளிர் மற்றும் சமூக வளர்ச்சி மீது கூடுதல் கவனம் செலுத்தப் போவதாக இத்தேர்தலில் வேட்பாளராக முதன் முறையாகக் களம் இறங்கியிருக்கும் அவர் தெரிவித்தார்.
அதே வேளையில்,நீடித்த மேம்பாட்டு இலக்கு அடிப்படையில் கோத்தா ராஜா மக்கள் வளப்பமும் பொருளாதார மேம்பாடும் காணப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றும் கஜேந்திரன் கூறினார்.
கல்வி, பொருளாதாரம், கட்டமைப்பு, பேரிடர் மற்றும் சமூக நலன் ஆகிய 5 அம்சங்கள் அடிப்படையில் கோத்தா ராஜா மக்களின் நல்வாழ்வுக்காகத் தாம் பாடுபடப் போவதாக தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் கோத்தா ராஜா மக்களுக்கு சிறப்பு வங்கியை அமைத்தல், பொருளாதார நடவடிக்கை செயற்குழுவை அமைத்தல், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்தல், பி 40 பிரிவினரை மேம்படுத்துதல் நகர்ப்புற சுற்றுலாவை உக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அவர் விவரித்தார்.
தொடர்ந்து, கட்டமைப்பு துறையில் பொழுதுபோக்கு மற்றும் பல்நோக்கு விளையாட்டு மையத்தை அமைப்பது, சாலை வசதிகளை மேம்படுத்துவது, கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதிக்கு யுடிசி மையத்தைத் திறப்பது, ஒவ்வொரு வீட்டிலும் குப்பைத் தொட்டி இருப்பதோடு முறையான குப்பைகள் வீசும் இடத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்றார்.
வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள வெள்ளப் பேரிடர் குழுவை அமைத்தல், பேரிடர் மற்றும் அவசர உதவி போன்றவற்றோடு சமூக நலன் விவகாரத்தில் நீண்ட கால மேம்பாட்டு திட்டத்தை வரைதல் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து வகையான உதவிகளும் மக்களிடம் சென்று சேர்வது உறுதிப்படுத்தப்படும் என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.
மேற்காணும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக இத்தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்கும்படி இத்தொகுதி மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


