spot_img
16.8 C
London
spot_img
Home மலேசியா கல்வி காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு மித்ராவின் புதுப்பிக்கப்பட்ட 75 மடிக்கணினிகள்!

காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு மித்ராவின் புதுப்பிக்கப்பட்ட 75 மடிக்கணினிகள்!

0
282

காஜாங், அக்.10-

   மலேசிய   இந்திய சமூக உருமாற்றப் பிரிவு  (மித்ரா)  புதுப்பிக்கப்பட்ட 75 மடிக்கணினிகளை  நாட்டின் முதல் தமிழ்ப்பள்ளியாக காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு இன்று வழங்கியது.

    இப்பள்ளி மாணவர்கள்  தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் துறையில் தங்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு இந்த மடிக்கணினிகள் உதவும் என்று இவற்றை  ஒப்படைக்கும்  நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய மித்ரா தலைமை இயக்குநர் கே.ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

    இப்பள்ளி  மாணவர்களின்  சாதனைகள்  மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மித்ராவின் புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளைப் பெறும் முதல் பள்ளியாக இப்பள்ளியைத்  தாங்கள் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

    மொத்தம்    6,000 மடிக்கணினிகள் நாடு முழுமையும் உள்ள 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு  வழங்கப்படும். இவற்றின் மதிப்பு 2.994 மில்லியன் வெள்ளியாகும் என்று  மித்ரா சிறப்புச் செயற்குழுத் தலைவர்  டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

     புதுப்பிக்கப்பட்ட இந்த மடிக்கணினிகள்   3 மாதங்களில் 525 தமிழ்ப்பள்ளிகளுக்கும்  வழங்கப்படும்.  120 என அதிகமான மடிக்கணினிகளைப் பெறும் பள்ளியாக ஜொகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி விளங்குகிறது. அடுத்து, மிகச் சிறிய எண்ணிக்கையான   2 மடிக்கணினிகள்  பெறும்  பள்ளிகளும் உண்டு என்றார்.

        1998 புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள்  சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும்  என்றும்  நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில்  ரமணன் விவரித்தார்.

      நடப்பு தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தங்களின் ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த மடிக்கணினிகள் பேருதவி புரியும்  என்றும் அவர் நம்பிக்கை  தெரிவித்தார்.

      மாணவர்கள் பயனடையும் வகையில்  மொத்தம் 3 வகுப்பறைகளில்  மடிக்கணினி  வசதி ஏற்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தங்களின் கற்றல் திறனை மாணவர்கள்  வளர்த்துக் கொள்வதற்கு  மித்ராவின் இந்த மடிக்கணினிகள் உதவும் என்றும் இவற்றை வழங்கிய மித்ராவுக்கு  பள்ளியின் சார்பில்  இவ்வேளையில் தாம் நன்றி கூறிக் கொள்வதாகவும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி விஜயலட்சுமி சாமிதுரை கூறினார். 

       இந்த  நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில  கல்வி இலாகா துணை இயக்குனர் சூர்யாடி, உலு லங்காட் மாவட்ட  கல்வி இலாகா சிறப்பு மேம்பாட்டுப் பங்காளித்துவ  பயிற்றுநர் ரோஸ்லினா ஓமார், மலேசிய, சிங்கை மற்றும் புருணைக்கான கூகள் ஃபோர் எடுகேஷன் இயக்குநர் ராஜா அஸ்மி அடாம், மித்ரா அதிகாரி டத்தோ அன்புமணி,  பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.