spot_img
12.3 C
London
spot_img
Home சமூகம் எம்.சி.எம்.சி சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தை முடக்குகிறது – தியோ நீ சிங்

எம்.சி.எம்.சி சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தை முடக்குகிறது – தியோ நீ சிங்

0
183

கோலாலம்பூர், நவ.21-

மலேசிய காவல் துறையின் கோரிக்கைகளின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட பயனர்களின் புகார்களைப் பெற்ற பிறகு, ஆபாச உள்ளடக்கத்தை தடுக்கவும், அகற்றவும் காவல்துறை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்பை நாடுகிறது.

இதில், எம்.சி.எம்.சி விசாரணை தொடர்பான உதவிகளை வழங்குவது, சம்பந்தப்பட்ட தகவலை திரட்டுவது, ஆபாச உள்ளடக்கத்தைத் தடுக்க அல்லது அகற்றுவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை காவல்துறைக்கு வழங்குவதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

“எம்.சி.எம்.சி இணையக் காவலராகச் செயல்படவில்லை. காவல்துறை அல்லது பிற அமலாக்க நிறுவனங்களிடமிருந்து கோரிக்கையைப் பெறும்போது மட்டுமே, உள்ளடக்கத்தை அகற்ற அல்லது தடுக்க நடவடிக்கை எடுக்கிறது” என்றார்.
“எனவே, பொதுமக்கள் ஆபாசமான உள்ளடக்கத்தைக் கண்டால், அவற்றை காவல்துறையிடம் புகாரளிக்கவும். பின்னர் எம்.சி.எம்.சி மேலதிக நடவடிக்கையை எடுக்கும்,” என்று மக்களவையில் அவர் பதிலளித்தார்.

சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை குறைக்க அல்லது தடுக்க எம்.சி.எம்.சி-இன் நடவடிக்கைகள் குறித்து ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிஃப்லி இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

காவல்துறையின் கோரிக்கையின் அடிப்படையில், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை, மொத்தம் 118 ஆபாச தளங்கள் எம்.சி.எம்.சி வழி தடுக்கப்பட்டதாகவும், சமூக ஊடக தளங்களில் அதன் தரத்தை மீறியதற்காக 76 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூலாய் நாடளுமன்ற உறுப்பினருமான தியோ கூறினார்.