கோலாலம்பூர், டிச.11-
இளைஞர்களுக்கு கைத்தொழில் கற்றுத் தரும் திவேட் தொழிற்பயிற்சி திட்டத்தில் அடுத்தாண்டு பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று மனித வள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.
“திவேட் தொழிற்பயிற்சி திட்டத்தில் 12 அமைச்சுகள் சம்பந்தப்பட்டுள்ளன. இதனை புதிய வடிவில் கொண்டு வரும் பொருட்டு 2024 ஆம் ஆண்டு புதிய கொள்கையின் கீழ் இப்பயிற்சி நடத்தப்படும் ” என்றார் சிவகுமார்.
நாட்டில் தொழிற் பயிற்சியை முடித்தவர்களுக்கு 98 விழுக்காடு வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அரசாங்கத்தின் எஸ். கே .எம் பயிற்சி திட்டத்தின் கீழ் உணவு, தங்கும் விடுதி என அனைத்த வசதிகளும் செய்து தரப்படுகின்றன .
அதே வேளையில், தனியார் துறையில் இவர்கள் பயிற்சியை மேற்கொள்வார்களேயானால் பிடிபிகே கடனுதவி ஏற்பாடு செய்து தரப்படும் என்று இங்குள்ள கோலாலம்பூர் கோபுரத்தில் நடைபெற்ற ஊடக துறையினருடான அமைச்சின் விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் அமைச்சர் பேசினார்.
நாடு முழுமையும் 1,344 அரசாங்க மற்றும் தனியார் தொழிற் பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் காணலாம் என்றார்.
அமைச்சின் செயல் திட்டங்கள் பற்றிய செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றி வரும் ஊடக துறையினருக்கு சிவகுமார் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
மனித வள அமைச்சுக்கும் ஊடக துறையினருக்குமிடையிலான அணுக்கமான உறவு என்றும் தொடர வேண்டும் என்றார் அமைச்சர்.
இன்று நடைபெற்ற இந்த மதிய விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் தமிழ், மலாய், ஆங்கிலம் , சீன பத்திரிகை , வானொலி, தொலைக்காட்சி மற்றும் மின்னியல் துறை செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.




