கோலாலம்பூர், டிச. 19-
இங்குள்ள ஸ்தாப்பாக், தாமான் டானாவ் கோத்தா ஸ்ரீ திருமுருகன் ஆலயத்தை இரு தினங்களுக்கு மூடியதற்காக அதன் பொறுப்பாளர் ராமச்சந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
” கடந்த 14, 15 ஆம் தேதிகளில் ஆலயத்தை மூடியதற்காக ராமச்சந்திரன் பக்தர்கள் மற்றும் நடவடிக்கை குழுவான எங்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று இந்த ஆலய நடவடிக்கை குழுவின் தலைவரான ஆர். கெவின் ரமேஷ் ராஜ் குமார் கோரிக்கை விடுத்தார்.
“இம்மாதம் 15 ஆம் தேதி அவசர கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்தினோம். இதில் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் 30 பேரும் பொது மக்கள் 30 பேரும் கலந்து கொண்டனர்.இந்த ஆலயத்தை மூடிய ராமச்சந்திரனின் செயலுக்காக இக்கூட்டத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது”.
“கடந்த 5 வருடங்களாக இவர்கள் ஆண்டு கூட்டத்தை நடத்தவில்லை. 2016/ 2017 கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தனர். ஆனால், அந்த ஆண்டுக்கான பொருளாளர் நான். இதில் கையெழுத்திட்ட நபரோ வெரொருவர். இதனை எதிர்த்து நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இக்குட்டத்தில் நிறைவேற்றினோம்” என்று தலைநகரில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
“ஆலயத்தின் நகைகளை ஒப்படைக்கும்படி ராமச்சந்திரன் தரப்பினர் எங்களை கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவற்றை நாங்கள் ஒப்படைப்போம் .இது குறித்து போலீசிலும் நாங்கள் புகார் செய்துள்ளோம் ” என்று கெவின் ரமேஷ் விவரித்தார்.
“போலீஸ் அனுமதியோடு நாங்கள் அவசர கூட்டத்தை நடத்தினோம். எங்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளன. ராமச்சந்திரன் நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை. ஆண்டு கூட்டத்தை முறையாக நடத்தாதது, ஆயுள் உறுப்பினர்களுக்கு பின் தேதியிட்ட ரசீதுகளை வழங்கியது போன்ற பல்வேறு கோளாறுகள் நடந்துள்ளன” என்றார்.

“சங்க பதிவகத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் .இந்த ஆலயம் சிறு வயது முதலே நாங்கள் வந்து போகும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். இது நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு இறையருள் தேடி வரும் மக்களுக்கு அமைதியும், நல்லாசியும் தரக்கூடிய ஒரு புனித தலமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்று அவர் மேலும் சொன்னார்.




