ரவாங், ஜன.26-
அண்மையில் மலாக்காவுக்கு மேற்கொண்ட கல்விச் சுற்றுலா தங்களுக்கு மன நிறைவையும் உள்ளக் களிப்பையும் ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர் இங்குள்ள மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 20 பேர் மற்றும் சுங்கை பூலோ, ஜாலான் சியராமாஸ் பாராட், இ.எல்.சி. அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்களுடன் இந்த பயணத்தைத் தாங்கள் மேற்கொண்டதாக மலேசிய மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் ஜி.பிரான்சிஸ் சிவா கூறினார்.
“இந்நாட்டில் பேறு குறைந்தவர்கள், குறிப்பாகச் சக்கர நாற்காலிகளில் தங்களின் வாழ்க்கையைச் செலவழிப்பவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் என்னென்ன என்பதைப் பற்றி இ.எல்.சி. மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்பயணமே இது” என்றார் பிரான்சிஸ் சிவா.

“இந்தப் பயணத்தின் போது இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எங்களுக்கு அனைத்து வகையிலும் புரிந்த உதவி எங்களின் மனதை நெகிழச் செய்தது. இவர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நாங்கள் அனைவரும் நன்றி கூறி கொள்கிறோம்” என்று அவர் மேலும் சொன்னார்.




