கோலாலம்பூர், மே 6-
2024-2026 தவணைக்கான கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகத் தொழிலியல் சம்மேளனத்தின் தலைமைச் செயலாளராக மோகனா சின்னத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் தலைவரான நிவாஸ் ராகவன் அறிவித்தார்.
மோகனா, வர்த்தக நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரின் நிறுவனமான ‘ஈவன் ஸா ஈவன் மாஸ்டர் ’ கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சங்கத்தில் உறுப்பினராக இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய இவர், நிர்வாகக் குழுவில் உறுப்பினர் மேம்பாட்டு பிரிவு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நாடு தழுவிய நிலையில் பி40 சிறு வர்த்தகர்களுக்காக மித்ரா- கோலாலம்பூர் இந்திய வர்த்தகச் சங்க சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கான திட்டங்களை இவர் சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.
இவரின் நிறுவனமான ஈவன்ஸா ஈவன் மாஸ்டர் திருமண வைபவங்களை மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்ததற்காக மலேசிய சுற்றுலா துறையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதோடு, இவரின் இந்த வர்த்தகம் 2021ஆம் ஆண்டு இலங்கைக்கும் விரிவாக்கம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகத் துறையில் இவர் கொண்டிருக்கும் பரந்த அனுபவம் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை சங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை இவர் மிகச் சிறந்த முறையில் நடத்துவதற்குத் துணை புரிந்தது.
அதே வேளையில், கடந்தாண்டு நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான அரசாங்கத்தின் மானியம் மற்றும் கடனுதவி திட்டங்களுக்கான தேசிய மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியதற்கும் இவர் மிகப் பெரிய பங்கை ஆற்றியுள்ளார். இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவரின் வர்த்தக அனுபவம் காரணமாக 2009ஆம் ஆண்டில் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிற்துறையினர் இவருக்கு சிறந்த பெண்மணிக்கான தொழில்முனைவர் விருது வழங்கி கௌரவித்தனர்.
பி40 பிரிவு மகளிரின் வர்த்தக மேம்பாட்டுக்கு இவர் அளப்பரிய பங்காற்றி வருவதோடு இதுவரை 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மோகனா சங்கத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக இதன் நிர்வாக நடவடிக்கைகளின் வெற்றிக்கு இவர் பாடுபடுவார் என்று தான் நம்புவதாக நிவாஸ் குறிப்பிட்டார்.





