பெட்டாலிங் ஜெயா, டிச 21-
கல்வி வழி பி40 மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரதான நோக்கம் என்று அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் இன்று இங்குள்ள இதன் தலைமையகத்தில் நடைபெற்றது.
கெடா, பினாங்கு, பேரா, கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர் போன்ற மாநிலங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் இந்த சந்திப்புக் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
2025 ஆம் ஆண்டில் ஸ்ரீ முருகன் நிலையம் தேசிய அளவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025இல் ஸ்ரீ முருகன் நிலையத்தின் அடுத்தக் கட்ட திட்டங்களும் நடவடிக்கைகளும் மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கும்.
குறிப்பாக அடுத்தாண்டு தேசிய அளவிலான இளைஞர்களை ஒன்றிணைத்து ஸ்ரீ முருகன் நிலையத்தின் இளைஞர் படை மாபெரும் படையாக திரண்டு ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடும் என்றார் அவர்.
அதே வேளையில், ஸ்ரீ முருகன் நிலையத்தின் பெண் சக்தி அணி வெற்றி புரட்சியில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ முருகன் நிலையம், 2025-ஆம் ஆண்டில் தங்களின் மிகப்பெரிய ஆயுதமான பிரமாஸ்தரா சக்தி வளைத்தளத்தின் வழி தனது 42ஆண்டு கால தத்துவங்களை அனைத்து இந்திய குடும்பங்களுக்குக் கொண்டு சேர்க்கும்.
42 ஆண்டு காலமாக ஸ்ரீ முருகன் நிலையம் இந்திய மாணவர்களின் கல்வி மீது முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.
அவ்வகையில், 2025 ஆம் ஆண்டில் பி40 இந்திய குடும்பங்களின் வெற்றி பாதைக்கு ஸ்ரீ முருகன் நிலையம் வழி வகுக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.


