Homeசமூகம்கல்வி உருமாற்றத்தின் புதிய அத்தியாயம்:ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘தந்தை மனம்’ உபகாரச் சம்பளத் திட்டம்!

கல்வி உருமாற்றத்தின் புதிய அத்தியாயம்:ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘தந்தை மனம்’ உபகாரச் சம்பளத் திட்டம்!

பெட்டாலிங் ஜெயா, நவ. 22-

ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘தந்தை மனம்’ எனும் சிற‌ப்பு கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

100 மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தனது முக்கிய வருடாந்திர நிகழ்வான தேசிய அமைப்பாளர் சந்திப்பு கூட்டத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு அடுத்த ஆண்டிற்கான செயல்திட்டங்கள், உத்திமுறைகள் மற்றும் இலக்குகளை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்காற்றும் என்று ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

மன நிறைவும் தாக்கமும் கொண்ட ஓர் ஆண்டை நினைவுகூர்ந்து பார்க்கும் போது அனைத்து அமைப்பாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கும் ஸ்ரீ முருகன் நிலையம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களின் அயராத அர்ப்பணிப்புகள் யாவும் ஸ்ரீ முருகன் நிலைய (எஸ்எம்சி) இலட்சியத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்றார்.

மேலும், அவர்களின் அயராத சேவை, கல்வித் திறனை வளர்ப்பதிலும், சமூகத்தை மேம்படுத்துவதிலும், அடுத்த தலைமுறையினரை உயர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் சுரேன் கந்தா குறிப்பிட்டார்.

இங்குள்ள ஸ்ரீ முருகன் நிலைய தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய அமைப்பாளர் கூட்டம் அனைத்துப் பகுதிகளின் கலந்துரையாடலாகவும் வியூகத் திட்டமிடலுக்கான ஓர் இன்றியமையாத களமாகவும் அமைந்தது.

இச்சந்திப்பு கூட்டத்தின் போது மேலும் ஒரு மைல்கல் திட்டமாக எஸ் எம்சி “தந்தை மனம்” எனும் இச்சிறப்பு உபகாரச் சம்பளத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம்,   தான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜாவின் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நிலைத்த பார்வையையும் பிரதிபலிக்கிறது.

இத்திட்டம் நிதி உதவி மற்றும் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

122,000 வெள்ளி மதிப்புள்ள இந்த முயற்சி, 100 இந்திய மாணவர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.

இதன் மூலம், அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும், வெற்றி பெறுவதற்குத் தங்கள் திறனை வளர்ப்பதற்கும் வழிவகுக்கும். இத்திட்டம் கல்வி வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டை ஆதரிப்பதிலும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்நிலையத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்றார்.

“தந்தை மனம்”மூலம் எஸ்எம்சி தொடர்ந்து தான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜாவின் மரபையும் விழுமியங்களையும் மதித்து , அடுத்த தலைமுறையினரிடையே நம்பிக்கை, மனவுறுதி மற்றும் தன்னம்பிக்கையை விதைக்கிறது.

நாடு முழுவதும் உள்ள மாணவர்களை கல்வியில் உயர்த்துவதற்கு எஸ்எம்சி மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாக இத்திட்டம் திகழ்கிறது.

 

 

 

 

 

 

 

 

spot_img

latest articles

explore more