கிள்ளான்: எஸ்.பி.எம். 2026 பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் கல்வி அடைவை மேம்படுத்தும் நோக்கில், கிள்ளான் தெப்பி சுங்கை பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ‘இலக்கு A+’ கல்விக் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தமிழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், மலாய் மொழி, வரலாறு மற்றும் தன்னம்பிக்கை ஊக்குவிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுமார் 60 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மாணவர்கள் பொதுத் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், அனுபவமிக்க ஆசிரியர்களால் பாட விளக்கங்கள், வினாக்களுக்குப் பதிலளிக்கும் உத்திகள், பயனுள்ள குறிப்புகள் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான எதிர்பார்ப்பு வினாக்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
33 ஆண்டுகால அனுபவமிக்க மலாய் மொழிப் பயிற்றுவிப்பாளர் டாக்டர் ராஜன் மணிகேசவன் மற்றும் இடைநிலைப் பள்ளியில் வரலாற்றுப் பாடம் கற்பிப்பதில் 40 ஆண்டுகால அனுபவமிக்க ஆசிரியர் ரகு ஆகியோர் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கினர்.
குறிப்பாக, இக்கருத்தரங்கைத் திட்டமிட்டு, மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுத்த செல்வ விநாயகர் ஆலய நிர்வாகத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமயப் பணிகளுடன் மட்டும் நின்றுவிடாமல், இளைய தலைமுறையினரின் கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திலும் ஆலய நிர்வாகம் அக்கறை செலுத்தி வருவதற்கு இக்கருத்தரங்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


