Homeமலேசியாகூடுதல் வரிகள் திருப்பி செலுத்தப்படும் என கூறும் இமெயிலை நம்ப வேண்டாம்!

கூடுதல் வரிகள் திருப்பி செலுத்தப்படும் என கூறும் இமெயிலை நம்ப வேண்டாம்!

கோலாலம்பூர், நவ. 7-
கூடுதல் வரி கட்டணத்தை திருப்பி பொதுமக்களிடமே வழங்கும் வகையில் வங்கி கணக்குகளை வழங்கும்படி கோரும் எந்த மின்னஞ்சல்களையும் (இமெயில்) உள்நாட்டு வருமான வரித்துறை (எல்.எச்.டி.என்.) அனுப்பியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி கட்டணம் தொடர்பில் பலர் பெற்றிருக்கும் மின்னஞ்சல்கள் திருட்டு கும்பல்களின் சதி என்றும் பொதுமக்களின் விபரங்களை குறிப்பாக அவர்களின் வங்கி கணக்குகளை அக்கும்பல்கள் பெறுவதற்காக இத்தகைய ஏமாற்று வழிகளில் ஈடுபடுவதாக எல்.எச்.டி.என். துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எல்.எச்.டி.என்னின் சின்னம் பொறிக்கப்பட்ட அந்த மோசடி மின்னஞ்சல்களில் வங்கி நிறுவனங்கள், தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் வாரிய உறுப்பினர்கள் ஆகியோரின் விபரங்கள் இடம் பெற்றிருப்பதோடு மின்னஞ்சல்களின் பெறுநர்கள் தங்களது கட்டணத்தை திருப்பி பெறும் வகையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை (லிங்க்) அழுத்த வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் பெறுநர்கள் அது கூறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுவதோடு சம்பந்தப்பட்ட பணத்தை திருப்பி அவர்களின் வங்கி கணக்கில் சேர்ப்பதற்கு அவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை அது கோருகின்றது. வரியை செலுத்துபவர்கள் தங்களது வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டுமென எல்.எச்.டி.என். துறை இதுவரையில் மின்னஞ்சல்களை ஏதும் அனுப்பவில்லை. மாறாக, வரியை செலுத்துபவர்களிடமிருந்து எல்.எச்.டி.என். துறை ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிக்கான பாரங்களை பெறுவதன் வாயிலாக வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை பெறுகின்றது.

அதிகமான வருமான வரி கட்டணங்கள் மீதான பரிசீலணை ஏற்றுக்கொள்ளப்பட்டால் எல்.எச்.டி.என். துறை ஈ.எப்.டி. எனப்படும் மின்னணு நிதி பரிமாற்றம், வரியை திருப்பி ஒப்படைக்கும் பற்றுச்சீட்டு, காசோலை, டெலிகிராம் ஆகியவற்றின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். இதுப்போன்ற மின்னஞ்சல்களை பெறும் பொதுமக்கள் அதன் உண்மைநிலையை ஆராய வேண்டும். மோசடி கும்பலின் இந்நடவடிக்கையை எல்.எச்.டி.என். துறை தொடர்ந்து கண்கானித்து வருகின்றது. இந்த மின்னஞ்சல்கள் வாயிலாக பாதிக்கப்பட்டவர்கள் அமலாக்கத் தரப்பினரிடம் புகார் அளிக்க வேண்டும். எல்.எச்.டி.என். பயன்படுத்தும் ஒவ்வொரு மின்னஞ்சல்களிலும் @hasil.gov.my என இருக்கும்.

இதை தவிர்த்து இதர தளங்களின் குறியீடுகளை பயன்படுத்தி தகவல்களை கோரும் மின்னஞ்சல்களை பொதுமக்கள் நம்ப கூடாது. மேலும், இந்த மின்ஞ்சல்கள் தொடர்பான உண்மை நிலையை பொதுமக்கள் எல்.எச்.டி.என். துறையை 1800-88-5436 எண் வாயிலாகவும் அல்லது www.hasil.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என அத்துறை கேட்டுக்கொண்டது.

spot_img

latest articles

explore more