கோலாலம்பூர், நவ, 19-
நகை விற்பனை துறையில் தனி முத்திரை பதித்து வரும் எஸ்.எம்.எஸ். டீன் ஜுவல்லெர்ஸ் நிறுவனத்தின் சமுதாயச் சேவையும் தொடர்ந்து வருகின்றது. பல்வேறான சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் செவ்வாக்கிழமை காலை 95 வசதி குறைந்த மாணவர்களுக்கு 300 வெள்ளிக்கான காசோலையையும் வழங்கினார்கள்.
மஸ்ஜித் இந்தியாவில் உள்ள எஸ்.எம்.எஸ். டீன் ஜுவல்லெர்ஸ் நிறுவனத்தின் முன்புறம் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிம்மா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம் தலைமையேற்றார். இந்திய முஸ்லிம் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து இன, சமயம் சார்ந்தவர்களுக்கும் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதுதான் முத்தாய்ப்பாக அமைந்தது. ‘‘பள்ளிக்குத் திரும்பலாம் என்ற நடவடிக்கையின் கீழ் வசதி குறைந்த மாணவர்களுக்கு இந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். டீன் ஜுவல்லெர்ஸ் உரிமையாளர் சிராஜ் முகமட் கூறினார்.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 300 வெள்ளிக்கான பற்றுச்சிட்டு வழங்கப்பட்டது. அதை கொண்டு மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள ஹனிபா பேரங்காடியில் 2 ஜோடி பள்ளி சீருடை மற்றும் 2 ஜோடி காலணிகளையும் அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அதோடு பள்ளிக்குத் தேவையான உபகரணப் பொருட்களையும் மாணவர்கள் வாங்கிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கு முதல் நாள் செல்லும் போது, இதர மாணவர்கள் புதிய சீருடை அணிந்திருக்கும் நிலையில் வறுமையில் உள்ள மாணவர்கள் மனமுடைந்து விடுகிறார்கள். அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுமென எஸ்.எம்.எஸ். டீன் ஜுவல்லெர்ஸ் இந்த திட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் காலங்களிலும் இந்த நடவடிக்கையானது தொடருமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். எஸ்.எம்.எஸ். டீன் ஜுவல்லெர்ஸ் நிறுவனம் முன்னெடுத்த இந்த நடவடிக்கைக்கு துணை நின்ற ஏபிசி உணவக உரிமையாளர் அயூப் கான், ஹனிபா பேரங்காடி, மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்திற்கும் சிராஜ் முகமட் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
