கோலாலம்பூர், டிச.20 –
2017 மலேசிய கிண்ண இறுதி ஆட்டத்தின்போது, காணொளி ஒன்றில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய ஜோகூர் டாரூல் தாசிம் அணியின் கேப்டன் சஃபிக் ரஹீம் மீது மலேசிய கால்பந்து சங்கம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிப்பதாக முன்னாள் ஆட்டக்காரர் பக்ரி இப்னி தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் முழுமைப் பெற்றிருந்தாலும். இன்னமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மலேசிய கால்பந்து சங்கம் மெளனம் சாதிக்கிறது என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தாம் மட்டுமின்றி உள்ளூர் கால்பந்து ரசிகர்களும் மலேசிய கால்பந்து சங்கத்தின் நடவடிக்கைகாக காத்து கொண்டிருப்பதாக பக்னி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மலேசிய கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு குழு விசாரித்ததா அல்லது கிடப்பில் போட்டு விட்டதா என அவர் கேள்வி எழுப்பினார். பழைய விவகாரத்தை மீண்டும் கிளற வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை என பக்ரி இப்னி தெரிவித்தார். ஆனால் மலேசிய கால்பந்து சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் தமது எண்ணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


