சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் தரப்பு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் 72 நாட்களக் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சிகிச்சை பெற்ற புகைப்படங்கள், வீடியோ வெளியிடப்படவில்லை என்று ஓராண்டாகவே சொல்லி வரப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அதனை சசிகலா தான் எடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் ஜெயலலிதாவின் ஆடைகள் சற்று விலகி இருக்கும் என்பதால் அவருடைய இமேஜ் கருதி வெளியிடவில்லை என்று தினகரன் கூறி இருந்தார். பொதுமக்களுக்கு இந்த வீடியோ வெளியிடப்படாது விசாரணை ஆணையத்திடம் ரகசியமாக கொடுத்துக் கொள்ளலாம் என்று சசிகலா கூறியதாகவும் தினகரன் கூறி இருந்தார். இந்நிலையில் நாளை ஆர்கே நகர் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.
நைட்டியில் ஜெயலலிதா அந்த வீடியோவில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்திருக்கும் ஜெயலலிதா கையில் ஜூஸ் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார். ட்ரக்யோஸ்டமி சிகிச்சைக்காக அவருடைய கழுத்துப் பகுதியில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவருடைய கையில் பிபி பார்ப்பதற்கான கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இதுவரை ஆதாரம் இருப்பதாக சொல்லி வந்த தினகரன் தரப்பு விசாரணை ஆணையத்திடம் மட்டுமே வீடியோ வழங்கப்படும் என்று கூறி வந்த நிலையில் இன்று திடீரென வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் என்ன உடல்நிலையில் இருந்தார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது.  இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதா எழுந்து அமர்ந்து ஜூஸ் குடிக்கும் காட்சிகள் இது என்று சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதாப் ரெட்டி கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள காட்சிகள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே ஜெயலலிதா உடல்நிலை தேறி விட்டதாகவும், ஜெயாடிவியின் சீரியல் ஒன்றை கொண்டு வரச்சொல்லி பார்த்ததாகவும் தினகரன் தரப்பு சொல்லி வந்தது. மேலும் அவர் நைட்டியில் இருந்தார் என்றும் அவர்கள் கூறி இருந்தனர், இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்ற தொணியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் நாளை தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஏன் இந்த வீடியோ வெளியிடப்பட்டது என்பது தான் இப்போதைய கேள்வி?