கோலாலம்பூர், பிப்.22-
அனைத்துலக நேர்மை அமைப்பான டிரான்ஸ்பாரேன்சி இண்டர்நேஷ்னல் (டி.ஐ.) வெளியிட்டிருக்கும் ஊழல் குறியீட்டு பட்டியலில் 180 நாடுகளில் மலேசியா 7 இடங்கள் குறைந்து 62ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மிக மோசமான பின்னடைவாக இது பார்க்கப்படுகின்றது. ஊழல் தடுப்பு அமைப்பான டி.ஐ. அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் (சி.பி.ஐ) மலேசியா 100இல் 47 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
ஆசியானின் 10 நாடுகளில் மலேசியா 3ஆவது இடத்தைப் பெற்றிருந்தாலும் புள்ளிகள் அளவில் அதிகம் பின்தங்கியுள்ளது. ஆசியான் நாடுகளில் சிங்கப்பூர் 84 புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும் அனைத்துலக அளவில் 6ஆவது இடத்திலும் உள்ளது. அதனைத் தொடர்ந்து 62 புள்ளிகளுடன் புருணை அதற்கடுத்த இடத்தில் உள்ளது. இந்த ஊழல் கண்ணோட்ட குறியீட்டு அறிக்கையில் மலேசியா கியூபாவுடன் 62 புள்ளிகளுடன் சரிசமமான நிலையில் உள்ளது.
வர்த்தக தொழில்துறைகள், நெருக்கடி ஆய்வாளர், மதிப்பிடப்படும் நாட்டில் வேலை செய்துவரும் பொதுமக்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் டிரான்ஸ்பாரேன்சி இண்டர்நேஷ்னல் அமைப்பின் இந்த வருடாந்திர அறிக்கை வெளியிடப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் 3 வெளிப்படையான ஆய்வின் கண்ணோட்டம் வாயிலாக இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. மலேசியா 9 வளங்களைப் பயன்படுத்துகின்றது.
இந்த அறிக்கைக் குறித்து முதலாவது நபராக கருத்தை வெளியிட்டிருக்கும் ஜ.செ.க.வின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங், துன் மகாதீர், துன் அப்துல்லா படாவி ஆகியோரின் நிர்வாகத்தைவிட தற்போதைய அடைவுநிலை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான இந்த 23 ஆண்டுகால ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் மலேசியா கடந்த இருபது ஆண்டுகளில் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் முறையான நிர்வாகம் ஆகியவற்றில் மலேசியா சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் சீனா, இந்தோனிசியா முதலான நாடுகள் அவற்றை சீர்ப்படுத்திக்கொண்டதாக அவர் கூறினார்.
மலேசியாவில் ஊழல் கண்ணோட்ட குறியீட்டு புள்ளிகளையும் தர வரிசையும் மேம்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது அமலாக்கத் தரப்பினர்கள் அது போலியான செய்திகள் என வகைப்படுத்துவதாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.


