கோலாலம்பூர், பிப். 22-
பொதுச்சேவை துறைகளில் இந்தியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உயர்பதவிகளை வழங்கி வருகிறார். இந்திய சமுதாயத்திற்கு இத்தகைய அங்கீகாரத்தை வழங்கி வரும் பிரதமரை தாம் பாராட்டுவதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜா தெரிவித்தார்.
கடந்த வாரம் மலேசிய சிறைச்சாலை இலாகாவின் ஆணையராக நரேந்தர் சிங் பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு சுங்கத் துறையின் தலைமை இயக்குநராக டத்தோஸ்ரீ சுப்ரமணியம் துளசி பதவி உயர்வு பெற்றார். அவரை தொடர்ந்து, இந்தியர் சமுதாயத்தில் நரேந்தர் சிங்கிற்கு இந்த உயர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக இன்று வெளியிட்ட தமது அறிக்கையில் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டத்தோ எ.தெய்வீகன் பினாங்கு மாநில போலீஸ் தலைவராக பதவி பெற்றார். அதே வேளையில், டத்தோ அமார் சிங்கும் புக்கிட் அமான், வர்த்தக குற்றப் புலாணாய்வுத் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். பிரதமர் நஜீப்பின் தலைமைத்துவத்தில் இனம், மதம் பாகுபாடின்றி தகுதிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு அரசு சேவை துறையின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது என சிவராஜா குறிப்பிட்டார்.
மலேசிய இந்தியர்கள் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் பல சேவைகளை செய்து வந்திருக்கின்றனர். ஆனால், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் காலத்தில் இந்தியர்களுக்கு உயர் பதவிகளுக்கான அங்கீகாரம் ஏதும் கிடைத்ததில்லை. நஜீப்பின் தலைமைத்துவத்தில் அரசு சேவை துறையில் இருக்கும் இந்தியர்களுக்கு இதுபோன்று பதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். அரசாங்க ஊழியர்களிடையே பெரிய மாற்றத்தை காணலாம் என அவர் கூறினார்.
மலேசிய இந்தியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செய்யும் சேவைகளுக்கு வெகுமதி அளிக்கப்படும். மலேசிய இந்தியர்கள் பொது சேவை துறையில் சேர்ந்து இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மஇகா இளையர் பிரிவு கேட்டுக் கொண்டது.
நமது அரசாங்கத்தில் தங்களது துறைகளில் உயர் பதவி பெறுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஆனால், அதற்கென முறையான தகுதிகளும் வழிகளும் உள்ளது. மலேசிய இந்திய வியூக பெருந்திட்டம் இந்திய சமூகத்திற்கு வளமான எதிர்காலத்தை கொண்டுவரும் சிவராஜா தெரிவித்தார்.
துன் டாக்டர் மகாதீர் மீண்டும் பிரதமராவதற்கு இந்திய சமுதாயத்தினர் அனுமதிக்கக்கூடாது. தற்போது அரசாங்கம் இந்தியர்களுக்கு மேற்கொண்டு வரும் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் இந்தியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


