லண்டன், பிப்.23 –
யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இறுதி 16 கிளப்புகள் பங்கேற்கும் சுற்றுக்கு இங்கிலாந்தின் அர்செனல் தகுதிப் பெற்றுள்ளது. வியாழக்கிழமை நடந்த 32 கிளப்புகளுக்கான சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் அர்செனல் 1 – 2 என்ற கோல்களில் சுவீடனின் ஒஸ்டெர்சுன்ட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

எனினும் கடந்த வாரம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 3 – 0 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்த அர்செனல் 4 – 2 என்ற ஒட்டு மொத்த கோல்களில் 16 கிளப்புகளுக்கான சுற்றில் கால் பதித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காராபாவோ கிண்ண இறுதி ஆட்டத்தை முன்னிட்டு அர்செனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் சில முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கு ஓய்வு வழங்கியிருந்தார்.

22 ஆவது நிமிடத்தில் ஒஸ்டெர்சுன்ட்ஸ் அணியின் முதல் கோலை ஹொசாம் அய்சே போட்டார். 69 வினாடிகள் கடித்து கென் செமா போட்ட இரண்டாவது கோலின் மூலம் ஒஸ்டெர்சுன்ட்ஸ் தனது நிலையை மேலும் வலுப்படுத்தி கொண்டது. முதல் பாதி ஆட்டத்தை 3 – 2 என்ற ஒட்டு மொத்த கோல்களில் முடித்து கொண்டாலும் அர்செனல் ரசிகர்கள் அந்த அணியின் ஆட்டக்காரர்களை நோக்கி கூச்சலிட்டனர்.

இரண்டாம் பாதியில் அர்செனலின் ஒரே கோலை சீட் கொலசினாச் போட்டார். இறுதியில் 4 – 2 என்ற ஒட்டு மொத்த கோல்களுடன் அர்செனல், 16 கிளப்புகள் சுற்றுக்கு தேர்வுப் பெற்றது.


