பெட்டாலிங் ஜெயா, ஏப்.24
கிள்ளான், தாமான் பெர்க்லே மற்றும் தாமான் புக்கிட் கூடா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை போலீஸ் இன்று கைது செய்தது.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் கிள்ளான் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கானில் போலீஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 29 முதல் 36 வயதிற்குட்பட்ட அந்த 3 ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக மாநில குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்ஏசி பாட்ஸில் அகமட் தெரிவித்தார்.

ஒரு வீட்டின் முன்புறம் அவர்கள் கொள்ளையடித்ததுச் சென்ற சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதாக அவர் கூறினார்.

மேற்கொண்ட விசாரணை அவர்களின் மீது ஏற்கனவே போதைப் பொருள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்தப் பதிவு எடுக்கப்பட்ட அதே நாளில் தென் கிள்ளானில் நிகழ்ந்த மற்றுமொரு கொள்ளைச் சம்பவத்திலும் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குற்றவியர் தடுப்புச் சட்டம் பிரிவு 393 மற்றும் பிரிவு 395/397இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.