கோத்தா டாமன்சாரா, ஏப். 24
பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடிக்கும் மைகாசே அறவாரியமும் இணைந்து பி40 பிரிவின் கீழ் இருக்கும் வெ.1500க்கு குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு வெ.80 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில காரணங்களால் அரசின் நிதியுதவி பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பி40 பிரிவிலிருக்கும் 100,000 இந்தியர்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்த உதவியை வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அதில் தற்போது 20,000 பேரை கண்டுபிடித்து இந்த உதவியை வழங்கியிருப்பதாகவும் செடிக்கின் துணை தலைமை இயக்குநர் மனோ வீரபத்ரன் தெரிவித்தார்.
முதலில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு இந்தப் பொருள் நிதியுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், மேலும் பல திட்டங்களை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இன்று கோத்தா டாமன்சாரா ஜயண்ட் பேரங்காடியில் இந்தியர்களுக்கு இந்தப் பொருள் நிதியுதவி வழங்கும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
கோத்தா டாமன்சாரா சுற்று வட்டார பகுதியில் அரசின் நிதியுதவி பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இங்கிருக்கும் மக்களுக்கு பொருள் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் கிட்டத்தட்ட 180 பேருக்கு இந்த பொருள் நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த பொருள் நிதியுதவி குறித்து பெரும்பாலான இந்தியர்களுக்கு முழு விவரம் தெரியாமலேயே இருக்கிறது. வெளியிட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று காலை தொடங்கி பி40 பிரிவைச் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்கள் தங்களின் பெயர்களை பதிந்து கொண்டனர். அவர்களது விண்ணப்பங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என மனோ வீரபத்ரன் தெரிவித்தார்.


