கோலாலம்பூர், ஏப். 24-
14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களுக்கு மஇகா தலைமைத்துவம் வாய்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக அனைவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ள தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜேம்ஸ் காளிமுத்து கேட்டுக் கொண்டார்.
இந்த முறை அதிகமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ சிவராஜ் போட்டியிடுகின்றார். ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் தினாளன், பிறை தொகுதியில் சுரேஷ், பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதி தினகரன் என 4 இளைஞர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கியுள்ளார். அதே போல மூத்த உறுப்பினர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களின் பட்டியல் மிகச் சிறப்பாக உள்ளது என தாம் நம்புவதாகவும் தேசியத் தலைவரின் கரத்தை வலுப்படுத்த கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஜேம்ஸ் காளிமுத்து வலியுறுத்தினார்.
2014ஆம் ஆண்டு கட்சியில் உட்பூசல் நடந்தது. அதன்பிறகு தமது சிறந்த தலைமைத்துவத்தால் அனைவரையும் அரவணைத்து கட்சியை மீண்டும் சீரான பாதைக்கு அவர் வழி நடத்தி வந்துள்ளார். குறிப்பாக அனைவரும் போற்றக்கூடிய தலைமைத்துவம் மிக்கத் தலைவராக அவர் திகழ்கிறார்.
14ஆவது பொதுத் தேர்தலில் அவர் முன்நிறுத்திய வேட்பாளர்கள் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் அது மஇகாவின் எதிர்காலத்திற்கு நன்மையை கொண்டு வரும். அதைக் கருத்தில் கொண்டு பகைமையை மறந்து கருத்து வேறுபாடுகளை களைந்து கட்சிக்காக உழைக்க வேண்டும் என ஜேம்ஸ் காளிமுத்து கூறியுள்ளார்.


