முகப்பு > அரசியல் > கூடுதல் தொகுதிகளை வெல்வோம்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

கூடுதல் தொகுதிகளை வெல்வோம்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

கோலாலம்பூர், ஏப். 24-

14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதுதான் கட்சியின் நோக்கம். அதோடு கூடுதலாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மஇகா வெல்லும் என அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

நேற்று மஇகா தலைமையகத்தில் நேதாஜி மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் சிகாமாட், கேமரன் மலை, தாப்பா, உலுசிலாங்கூர் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளை மஇகா வென்றது. இம்முறை இந்த நான்கு நாடாளுமன்றத்தையும் சேர்த்து 2 அல்லது 3 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல மஇகா இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை ஜோகூரில் கம்பீர், கஹாங், தெங்காரோ, மலாக்காவில் காடிக், நெகிரி செம்பிலானில் ஜெராங் பாடாங் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை மஇகா கைப்பற்றியது. இம்முறை இந்த 5தையும் சேர்த்து கூடுதலாக 3 அல்லது 4 சட்டமன்ற தொகுதிகளை மஇகா கைப்பற்ற கடுமையாக உழைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தல் அனைவருக்கும் சவாலானதுதான். அந்த சவாலை எதிர்கொண்டு கூடுதலான தொகுதிகளை வெல்ல மஇகா முழு வீச்சில் களம் இறங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கேமரன் நாடாளுமன்ற தொகுதியில் மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மற்றும் அவரது உறுப்பினர்களால் மஇகாவிற்கு பாதிப்பு இருக்காது என மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மைபிபிபிக்கு தொகுதி வழங்குவதில் மஇகாவிற்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் கேமரன் மலை எங்களுடைய தொகுதி என்பதுதான் நாங்கள் ஆரம்பம் முதல் கூறிவருகிறோம். மைபிபிபி போட்டியிடும் தொகுதியில் மஇகா களம் இறங்கி வெற்றிக்காக உழைக்கும். அதேபோல் தேசிய முன்னணியின் வெற்றிக்கு மைபிபிபி கட்சியும் உறுதுணையாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமைக்க தேசிய முன்னணி தலைமைத்துவம் வியூகம் வகுத்தது. அந்த வியூகத்தின் அடிப்படையில் தான் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியை அம்னோவிற்கு மஇகா விட்டுக்கொடுத்தது என டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

ஊத்தான் மெலிந்தாங் மஇகாவின் பாரம்பரிய தொகுதி. பல ஆண்டுகளாக இத்தொகுதியில் மஇகா உழைத்து வந்துள்ளது. ஆனால் பேராவை தே.மு. கைப்பற்ற கூட்டு முயற்சி அவசியம். அந்த வகையில் அந்த தொகுதிக்கு பதிலாக சுங்கையில் மஇகா போட்டியிடுகிறது. வரும் காலங்களில் மீண்டும் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியில் மஇகா போட்டியிடும் என அவர் உறுதியளித்தார்.

14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், தலைமைப் பொருளாளர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி ஆகியோரின் பெயர் விடுபட்டுள்ளது என செய்தியாளர் வினவிய கேள்விக்கு அந்த இருவருக்கும் இதர முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் உறுதி அளித்தார்.

பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளில் அனைத்து தலைமைச் செயலாளர்களும் பேட்டியிடும் வேளையில் சக்தி வேல் இம்முறை போட்டியிடவில்லை. 13ஆவது பொதுத்தேர்தலில் அவர் காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன