கோலாலம்பூர், மே 13-
ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் அவர் நிதித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து முன்னாள் 2ஆவது நிதித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கூறுகையில், லிம் குவான் எங் மீது நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தை சுமத்தும் வரையில் அவர் குற்றமற்றவராக இருப்பார் என தெரிவித்தார்.

நான் எப்பொழுதும் கூறியதைப் போல் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றம் நிரூப்பிக்கப்படும் வரையில் யாரும் குற்றவாளிகள் அல்லர். நாம் சட்டத்தை மதிக்க வேண்டுமென அவர் கூறினார்.

நேற்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்த மூன்று அமைச்சர்களில் லிம் குவான் எங்கும் ஒருவர். சந்தை விலைக்கும் குறைவாக ஜோர்ஜ்டவுனில் வர்த்தகர் பாங் லி கூனிடமிருந்து லிம் குவான் எங் பங்களா வீட்டை வாங்கியது தொடர்பில் லிம் குவான் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. தன் மீதான இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாக லிம் குவான் எங் கூறி வந்தார்.

இதனிடையே, ஜொஹாரி அப்துல் கனி கூறுகையில், புதிய அரசாங்கம் அது வழங்கிய வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். யார் ஆட்சி புரிய வேண்டும் என்பது குறித்து மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதனால், அணியாக பிரதமர் யாரை அமைச்சராக தேர்தெடுத்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதனிடையே, ஊழல் மற்றும் நெருக்கமானவர்களுக்கு சலுகைகளை அளிப்பதை எதிர்க்கும் மையமான சி4 மையத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தியா கேப்ரில் கூறுகையில்ம் ஹரப்பான் தலைவர்களில் ஒருவரான லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினார். பொதுத்தேர்தலுக்கு முன்பு அப்போதைய எதிர்கட்சியில் இருந்த தலைவர்களில் தேர்தெடுக்கப்பட்டு சிலர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது உறுதிபடுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.

புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட சிந்தியா கேப்ரில், நாட்டின் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதிபடுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.