முகப்பு > அரசியல் > நிதி வழங்குவதில் தே.மு. கொள்கையா? ஜொகூர் மந்திரி பெசாரின் கருத்தை ஏற்க முடியாது! சைட் சாடிக்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நிதி வழங்குவதில் தே.மு. கொள்கையா? ஜொகூர் மந்திரி பெசாரின் கருத்தை ஏற்க முடியாது! சைட் சாடிக்

மூவார், மே 13-
கடந்த காலங்களில் ஜொகூரில் எதிர்கட்சியினருக்கு நிதி வழங்காமல் வந்த தேசிய முன்னணியின் கொள்கையையே தாம் கடைபிடிக்கவிருப்பதாக அம்மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாஃபியன் கூறியிருக்கும் கருத்தைத் தாம் ஆதரிக்க முடியாது என மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், டத்தோ ஒஸ்மான் சாஃபியான் கருத்தை ஏற்க முடியாது. இது குறித்து எனது கூட்டணி நண்பர்களுடன் பேசி விட்டேன். இவ்விவகாரத்தில் நாங்கள் கொள்கை ஒன்றை வரைவோம்.

வளமான ஜனநாயக மலேசியாவிற்காக, நமக்கு பொறுப்புடன் செயல்படக்கூடிய வலுவான மற்றும் திறமையான எதிர்கட்சி தேவை. எதிர்கட்சியினருக்கு நிதி வழங்கப்பட வேண்டும். அவர்கள் நம்மை எதிர்த்ததற்காக அல்ல. மாறாக, அவர்கள் செயல்படவும் சமநிலை அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டுமென தமது முகநூல் பக்கத்தில் சைட் சாடிக் பதிவிட்டுள்ளார்.

நேற்று, ஒஸ்மான் சாஃபியன் முன்பு மாநில ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி எதிர்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்காமல் வந்ததைப் போன்ற கொள்கையையை பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான புதிய மாநில அரசாங்கமும் தொடரவிருப்பதாக கூறியிருந்தார்.

எதற்காக நாங்கள் அவர்களுக்கு நிதி வழங்க வேண்டும்? இது அவர்களுக்கு துப்பாக்கி குண்டை வழங்குவது போலாகும் என கூறியிருந்தார். இது குறித்து வினவப்பட்ட போது, சைட் சாடிக் மேற்கண்டவாறு பதிவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஒஸ்மான் மற்றும் ஹராப்பானின் இதர தலைவர்களிடமும் தாம் பேசியிருப்பதாகவும் ஒஸ்மான் இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை அடைவதற்கு வெளிப்படையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவருமான சைட் கூறுகையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்குவதில் சிலாங்கூர் அரசாங்கத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன