புத்ராஜெயா, மே.15 –
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ சுல்கிப்ளி அஹ்மாட் இன்று புத்ராஜெயாவில் தேசிய சட்டத்துறை அலுவலகத்தில் மீண்டும் பணிக்கு திரும்பினார். காலை 8.15 மணி அளவில் பிரிசின்ட் 4- ல் உள்ள தேசிய சட்டத்துறை தலைவரின் தலைமை அலுவலகத்தில் நுழைந்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவியில் இருந்து விலகி கொண்ட சுல்கிப்ளி அஹ்மாட், திங்கட்கிழமை தமது ராஜினாமா கடிதத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ அலி ஹம்சாவிடம் வழங்கினர். 50 வயதுடைய சுல்கிப்ளி கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் முதல் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக பொறுப்பேற்றார்.
டான் ஸ்ரீ டாக்டர் அபு காசிம்முக்குப் பதில் சுல்கிப்ளி அந்த பொறுப்பை ஏற்றார். அதற்கு முன்னர் தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் தேசிய வருமான மீட்பு குழுவின் இயக்குனராக பொறுப்பு வகித்தார். தற்போது தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு மீண்டும் திரும்பியுள்ள சுல்கிப்ளி எந்த பொறுப்பை ஏற்பார் என உறுதியாக தெரியவில்லை.


