அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தேசிய முன்னணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் !
முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் !

கோலாலம்பூர், மே.15- 

மலேசிய அரசியலில் தேசிய முன்னணி தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதிச் செய்யும் நோக்கில் அந்த கூட்டணியில் ஏற்படுத்தப்பட விருக்கும் மாற்றங்களை சிறப்பு குழு ஒன்று ஆராயும். தேசிய முன்னணியின் இலக்கு மற்றும் தேவைகளை அந்த சிறப்பு குழு  நிர்ணயிக்கும் என தேசிய முன்னணி இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கைரி இவ்வாறு தெரிவித்தார். தேசிய முன்னணியின் இடைக்கால தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி இந்த கூட்டத்துக்குத் தலைமையேற்றார்.  இந்த சிறப்பு குழுவில் இடம்பெறவிருக்கும் உறுப்பினர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே தேசிய  முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என அஹ்மாட் சாஹிட் கேட்டு கொண்டதாக ம.இ.கா. தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்தார். தேசிய முன்னணியின் ஓர் அங்கமாக , ம.இ.கா.  தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்தார். அதேவேளையில் சிறந்த எதிர்கட்சியாக ம.இ.கா. பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியில் இருந்து சில உறுப்பு கட்சிகள் விலகிக் கொண்டாலும் அந்த கூட்டணி இன்னும் வலுவுடனே இருப்பதாக ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார். 14 ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ம.சீ.ச முழுமையான ஆய்வை மேற்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன