கோலாலம்பூர், மே 15-
பக்காத்தான் ஹராப்பான் இதற்கு முன் வாக்குறுதி அளித்ததை போல இன்னும் 100 நாட்களுள் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி ரத்து திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று டான்ஸ்ரீ ஸெத்தி அக்தார் அசிஸ் தெரிவித்தார்.
அரசாங்க ஆலோசனை குழுவின் உறுப்பினரான அவர் கூறுகையில், வாக்குறுதியளித்தப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் அத்திட்டத்தை ரத்து செய்வது சற்றுக் கடினம். அதற்கான விதிமுறைகள் நாம் பின்பற்றியாக வேண்டும் என்று அவர் சொன்னார்.
நாம் ஏற்கனவே இருக்கும் சட்டத்தை பின்பற்றியாக வேண்டும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நாம் விதிமுறைகளை மீறக்கூடாது என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் கூறியதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த 100 நாட்களுக்குள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் நாடாளுமன்றம் மற்றும் இதர வழிகளில் மேற்கொள்ளப்படும் என்று பேங்க் நெகாரா செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இவ்வேளையில், மக்களின் வாங்கும் சக்தியை படிப்படியாக அதிகரிக்கச் செய்ய அரசாங்க ஆலோசனை குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக டான்ஸ்ரீ ஸெத்தி அக்தார் கூறினார்.
ஜிஎஸ்டியை ரத்து செய்வது உறுதிதான். தற்போது அதன் செயல்முறையையும் அதன் வீதத்தையும் 0 விழுக்காடாக குறைப்பதுதான் தற்போதைய பிரச்னையாக உள்ளது. 100 நாட்களுக்குள் நாங்கள் இது குறித்து அறிவிப்புகளை வெளியிடுவோம். மக்களுக்கும் நாங்கள் எந்த முறையை பயன்படுத்தினோம் என்றும் தெரிய வரும் என முன்னாள் பேங்க் நெகாராவின் தலைவருமான அவர் கூறினார்.


