நீலாய், ஜூன் 24-
நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டப்படும் என வாக்குறுதி அளித்தது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் நினைவுறுத்தினார். நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 100 நாட்களில் நிறைவேற்றுவோம் என வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
டோல் அகற்றப்படும், பெட்ரோல் விலை குறைக்கப்படும், கல்வி கடனுதவி உட்பட பல வாக்குறுதிகளை நம்பிக்கை கூட்டணி வழங்கியது. மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியது அக்கூட்டணியின் கடமை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அக்கட்சியின் 10ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நீலாயில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் தலைமையுரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேர்தலுக்கு முன் பினாங்கு முதல்வராக இருந்த லிம் குவான் எங் நம்பிக்கை கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பினாங்கு பாலத்தின் டோல் உடனடியாக அகற்றப்படும் என்றார். ஆனால், இதுநாள் வரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தனேந்திரன் சாடினார். முன்னதாக மலேசிய மக்கள் சக்தி கட்சி தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னமே அறிவித்து விட்டது.
கடந்த அரசாங்கமான தேசிய முன்னணியிடம் இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டது. நம்பிக்கை கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையில் இதனை குறிப்பிட்டிருந்தார்கள். அதனால், இந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அதோடு, 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற குற்றச்சாட்டையும் அக்கூட்டணி முன்வைத்தது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 30,000 என அவர்கள் கூறி வருகிறார்கள்.

நம்பிக்கை கூட்டணி வாக்குறுதி மக்களை கவர்ந்ததால் அவர்கள் மாற்றத்தை விரும்பினார்கள். குறிப்பாக, 100 நாட்களில் செய்து முடிப்போம் என அவர்கள் வழங்கிய வாக்குறுதி தேர்தலின் மாற்றத்திற்கு வழிவகுத்தது. அதனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கை கூட்டணி பின்வாங்கக்கூடாது என தனேந்திரன் கூறினார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியை பொறுத்தவரை தேசிய முன்னணியின் தோழமை கட்சியாகத்தான் இருந்தது. உறுப்புக் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இப்போதும் கூட இக்கட்சி அதே நிலையில் சயேச்சையாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இனியும் அப்படித்தான் செயல்படும் என தனேந்திரன் கூறினார்.


