(மதியழகன் முனியாண்டி)

1MDB முறைகேடுகளைப் படித்தால் புரியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த விவகாரத்தில் வரும் பெயர்களும் நபர்களும்தான். ஒரு டஜன் மனிதர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி 1MDB-யோடு சம்பந்தப்படுகிறார்கள் என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் விடுகிறோம்.

ஆகவே 1MDB-யில் யார்-யார் சம்பந்தப்படுள்ளார்கள் என்பதனை பிரித்து வெளியே எடுத்து தனி சீரியலாக எழுதியுள்ளேன். இது மேற்கொண்டு 1MDB-யை குறித்து படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

1MDB-யில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து நாம் எதுவும் தெரியாமல் கடந்து போவது போல்; நம் நாட்டில் நடந்த சில சம்பவங்களை நாம் மிக எளிமையாக கடந்து போய் இருப்போம். நம் நாட்டில் நடந்த சில சம்பவங்களுக்கும் 1MDB-க்கும் சம்பந்தம் இருக்கிறது. அதே போல் நம் ஒவ்வொருவருக்கும் 1MDB பணத்தில் சம்பந்தம் இருக்கிறது.

நஜிப் பிரதமராக இருந்த கால கட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. நாமும் அதை பெரிது பண்ணாமல் மிக சாதரணமாக கடந்து போயிருப்போம். ஒவ்வொரு சம்பவங்களின் பின்னால் ஒரு பெரிய கதைகள் பின்னப்பட்டிருக்கிறது. கியஸ் தியரி போல் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.

2015-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தின் 10ஆ-வது மாடி தீப்பிடித்து எரிந்து போனது. பழைய ஆவணங்கள் (Dokumen yang tidak penting/lama) வைத்திருக்கும் மாடி அது. முக்கியமான ஆவணங்கள் ஏதும் அந்த தீவிபத்தில் எரிந்து போகவில்லை என அப்போதைய போலிஸ் படை தலைவர் தான் ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறினார்.

ஆனால் புக்கிட் அமான் 10-ஆவது மாடி என்பது குற்ற புலனாய்வுத் துறை. குற்ற புலனாய்வுத் துறைத்தான் Special Task Force-வோடு இணைந்து, நஜிப்பின் 2.6 பில்லியன் அம்பேங்க் கணக்கு வழக்கை விசாரித்து வந்தார்கள்.

இந்த ஆண்டு ஆரம்பம் பிப்ரவரி மாதத்தில் பெட்டாலிங் ஜெயா EPF கட்டடம் எரிந்து போன செய்தியைப் படித்திருப்போம். EPF-இல் இருந்து 10.64 பில்லியன் பணத்தை எடுத்து நஜிப் 1MDB தொடர்பான நிருவனங்களுக்கு கொடுத்ததாக சரவாக் ரிப்போர்ட் நேரடியாக குற்றம் சாட்டியது.

Ten Billion in bonds looted from EPF to raise four billion dollors for Najib- Sarawak Report Dated 28 February 2018.

29 ஜூலை 2013-ஆம் ஆண்டு 75 வயதான அம்பேங்க் நிருவனர் ஹுசைன் நஜாடி கோலாலம்பூரில் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

9 அக்டோபர் 2015-ஆம் ஆண்டு அலோர் லிம்பாட், திரங்கானு சட்டமன்ற உறுப்பினர் அலியாஸ் அப்துல்லா அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார். இந்த வழக்கை இன்றும் விசாரித்து வருகிறார்கள்.

அலியாஸ் அப்துல்லா TIA-வில் சம்பந்தப்பட்டுள்ளார். ஆனால் போலிஸ் இதை மறுத்து வருகிறது.

2015-இல் அப்போதையை இரண்டாவது நிதியமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ அகமாட் ஹுஸ்னி முகமட் ஹனட்சலா (Dato Sri Ahmad Husni Mohamad Hanadzlah) திடிரென தாம் வகித்து வந்த இரண்டாவது நிதியமைச்சர், அம்னோ மற்றும் பாரிசான் கூட்டணியின் பொருளாளர் பதவி அனைத்தையும் துறந்து விட்டு லண்டன் சென்றார்.

மேற்படிப்புக்காக அகமாட் ஹுஸ்னி லண்டன் போகிறார் என்றார் முன்னாள் பிரதமர் நஜிப். திடிரென அவர் அனைத்து பதவிகளையும் ஏன் துறந்தார்?

இப்படி நிறையவே 1MDB தொடர்பான பல சம்பவங்கள் 2013 தொடங்கி நடந்து வருகிறது. அதை எல்லாம் நாம் மிக சுலபத்தில் கடந்து போய் விட்டோம். எதற்காக இது எல்லாம் நடந்தது/நடக்கிறது என்று மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் எதையும் மக்களிடமிருந்து நெடுங்காலத்துக்கு மறைத்து வைக்க முடியாது. ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். 1MDB குறித்து ஒவ்வொன்றாக இனி மெல்ல வெளியே வரும்.

இந்த கட்டுரையில் 1MDB சம்பந்தப்பட்ட சில முக்கிய பிரமுகர்கள் குறித்தும்; அவர்கள் எப்படி 1MDB கதைக்குள் வருகிறார்கள் என்று சுருக்கமாக எழுதியுள்ளேன்.

ஜோ லோ@ லோ தேக் ஜோ Jho Low @ Low Taek Jho

Party Boy, தீராத விளையாட்டு பிள்ளை என இணைய முழுக்க ஜோ லோ குறித்து பல தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. ஜோ லோ குறித்து பல தகவல்கள் சொல்லப்படுகிறது. பினாங்கு கோடிஸ்வரரின் பேரப்பிள்ளையான ஜோ லோ ஹாங்காங்-கில் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தார்.

முதலீட்டு துறையில் சம்பந்தப்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்ப்புடைய ஜோ லோ Terengganu Investment Authority(TIA)-க்கு அலோசகராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 1MDB உருவான போது, அங்கேயும் அலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நஜிப் பிரதமர் பதவி ஏற்றவுடன் அவருடன் நெருங்கி பழகி தன் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். 1MDB விவகாரத்தில் ஜோ லோவே நஜிப்-பிற்கு முக்கிய அலோசகராக விளங்கினார். இதன் மூலம் நஜிப்-பின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் ஜோ லோ இணைந்துக் கொண்டார்.

ஜோ லோ 1MDB முறைகேடுகளில் முக்கிய சந்தேக குற்றவாளி(Prime Suspected) என சமீபத்தில் நமது உள்துறை அமைச்சர் தான் ஸ்ரீ முகைதீன் யாசின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

ஆனால் ஜோ லோவிற்கும் 1MDB-க்கும் நேரடி தொடர்பு ஏதும் இல்லை என 1MDB-யின் செயல்முறை அதிகாரி அருள் கந்தா நெடுங்காலமாக சொல்லி வருகிறார். ஆனால் அனைத்து 1MDB முறைகேடுகளில் ஜோ லோவின் பெயர்தான் அடிப்படுகிறது. ஜோ லோவே அனைத்திற்கும் மூலகாரணமாக இருக்கிறார். ஆனால் ஜோ லோ, அலோசகர் என்பதை தவிர, வேறு எந்த முக்கிய பதவியும் 1MDB-யில் வகிக்கவில்லை.

1MDB பணத்தில் முறைகேடாக வாங்கப்பட்ட சொந்துக்கள்; தவறாக முதலீடு செய்யப்பட்ட பணம்; காணமல் போன தொகை என பல 1MDB முறைகேடுகளில் ஜோ லோவே முக்கிய தரகராக செயல்ப்பட்டிருக்கிறார். அனைத்திலும் ஜோ லோ சம்பந்தப்பட்டுள்ளார்.

ரிசா அஸிஸ்(Riza Aziz Bin Abdul Aziz Nong Chik)

டத்தின் ரோஸ்மாவுக்கும் அவரின் முதல் கணவர் அப்துல் அசிஸ் நோங் சிக்-க்கும் பிறந்த மகன். இவருக்கும் ஜோ லோலோவுக்கும் நஜிப்-பின் மூலம் அறிமுகம் ஏற்ப்பட்டது. பிறகு இருவரும் நெறுங்கிய நண்பர்கள் ஆனார்கள். ரிசா அசிஸ்-க்கும் 1MDB-க்கும் சமந்தம் இல்லை. 1MDB-யில் எந்த பதவியும் இவர் வகிக்கவில்லை. ஆனால் 1MDB பணத்தை முறையற்ற முறையில் எடுத்து செலவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது விசாரணையில் இருக்கும் 1MDB வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். டைட்டானிக் படத்தின் ஹீரோ லியோநர்டோ(Leonardo DICaprio) நடித்த The Wolf of Wall Street என்கிற பிரமாண்டமான ஹாலிவுட் படத்தை 1MDB-யின் பணத்தின் மூலம் தயாரித்துள்ளார் என்று அமெரிக்காவின் நீதிதுறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

1MDB பணத்தை பயன்படுத்தி மில்லியன்கள் பெருமானமுள்ள ஓவியங்கள், அமெரிக்காவில் பங்களா போன்றவற்றை வாங்கியுள்ளார்.

சராவாக் ரிப்போர்ட் மற்றும் கிளர் ரவ்கஸ்டல் பிரவுன்(Clare Rawcastle Brown)

சரவாக் ரிப்போர்ட் என்பது லண்டனிலிருந்து இயங்கும் ஒரு இணையப்பத்திரிக்கை. இதன் ஆசிரியர் பெயர் கிளர் ரவ்கஸ்டல் பிரவுன். 2014 தொடங்கி தொடர்ந்து 1MDB முறைகேடுகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

நஜிப் அம்பேங்க் வங்கி கணக்கில் 2.6 பில்லியன் பணம் டிபாசிட் செய்யப்பட்டது என்கிற தகவலை வெளியிட்டு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். இதன் பிறகே சரவாக் ரிப்போர்ட் பெயர் பெருமளவில் பேசப்பட்டது.

கடந்த பொது தேர்தலில் போது பாஸ் கட்சி நஜிப்-பிடமிருந்து 90 மில்லியன் வாங்கியதாக மற்றுமொரு வெடிகுண்டை தூக்கி போட்டார். தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள 1MDB விசாரணையில் முக்கிய தகவல்கள் வழங்குவதற்கு ரவ்கஸ்டல் பிரவுன் அண்மையில் மலேசிய வந்து சென்றுள்ளார்.

டத்தோ ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹெல்மி(Datuk Sharol Azral Ibrahim Halmi)

ஆரம்பத்தில் Terengganu Investment authority-கும், பிறகு 1MDB-க்கும் செயல்முறை அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார். இவர் செயல்முறை அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில்தான் 1MDB-யில் முறைகேடுகள் நடந்துள்ளது. இவரே 1MDB குறித்த அனைத்து முடிவுகளும் எடுத்தார்.

1MDB தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக புகார்கள் எழுந்த பிறகு மார்ச் 2013-ஆம் ஆண்டில் 1MDB-யின் தலைமை செயல்முறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். பிறகு PEMANDU(Unit Pengurusan dan Pelaksanaan) எனப்படும் நிர்வாகம் மற்றும் அமுலாக்க பிரிவுக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

அருள் கந்தா

1MDB செயல்முறை தலைமை அதிகாரியாக 2015-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அருள் கந்தா 1MDB-க்குள் வருவதற்கு முன்பே பல முறைகேடுகளும் தவறுகளும் நடந்து விட்டது. 1MDB தவறுகளை பூசி மெலுகுவதற்கே அருள் கந்தா 1MDB-க்குள் கொண்டுவரப்பட்டார்.

அருள் கந்தா சம்பளம் வாங்கும் ஒரு அதிகாரி. நஜிப் மற்றும் ஜோ லோ இருவரும் 1MDB குறித்து பதிலளிக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராஹிம் 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் செய்தி ஒன்று வெளியிட்டுருந்தார்.

அருள் கந்தா லண்டனிலும், அரபு நாடுகளிலும் நிதி நிருவனங்கள் நடந்திக் கொண்டிருந்தார். 1MDB சிக்கலை சரி செய்வதற்கும்; நிதி நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் 1MDB-க்குள் கொண்டுவரப்பட்டார். ஆனால் அருள் கந்தா-வால் எதுவும் செய்ய முடியாமல் போனது. நிலைமையை இன்னும் மோசமாக்கினார். கடனுக்கான வட்டியை கட்டுவதற்கு மேலும் கடன் வாங்கினார். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன், அந்த கடனை அடைக்க இன்னொரு கடன் என்று கடன் மேல் கடன் வாங்கி 1MDB-யை கடனால் நிரப்பினார்.

ஹுசைன் அகமாட் நஜாடி(Hussain Ahmad Najadi)

வாங் கெலியான் சம்பவத்தில் நஜிப்க்கு தொடர் இருந்தாலும்; அல்தூன்யா கொலை வழக்கில்தான் நஜிப் பெயரும் அவரின் மனைவி ரோஸ்மா பெயரும் நேரடியாக அடிப்பட்டது. அதன் பிறகு நஜாடி கொலை வழக்கில் நஜிப் பெயர் அடிப்பட்டது. அப்போது இந்த கொலை வழக்கை குறித்து யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

அம்பேங்க் நிருவனர் ஹுசைன் நஜாடி சுடப்பட்டபோது அவருக்கு வயது 71. 22 மார்ச் 2013-இல் நஜிப்-பின் அம்பேங்க் வங்கி கணக்கில் USD620 மில்லியன் டிபாசிட் செய்யப்பட்டது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒருவர் வங்கி கணக்கில் பணம் டிபாசிட் செய்யப்பட்டால் பேங்க் நெகாராவுக்கு தெரியப்படுத்த வேண்டும். நஜிப் வங்கி கணக்கில் பணம் டிபாசிட் செய்யப்பட்டதற்கு மறுநாள் நஜாடி பேங்க் நெகாராவில் இதன் தொடர்பாக புகாரளித்தார்.

25 மார்ச் 2013-இல் நஜிப் அம்பேங்க் வங்கி கணக்கில் மேலும் USD60 மில்லியன் டிபாசிட் செய்யப்பட்டது. உடனே நஜாடி பேங்க் நெகாராவுக்கு தெரியப்படுத்தினார்.

5 மே 2013 நமது நாட்டின் 13-வது பொது தேர்தல் நடைபெற்றது. இந்த சமயத்தில் அந்த பணம் நஜிப்-பின் வங்கி கணக்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. இதையும் பேங்க் நெகாராவுக்கு தெரியப்படுத்தினார். ஆனால் பேங்க் நெகாரா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தமது வங்கிக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும் என நினைத்த நஜாடி; 28 ஜூலை 2013-இல் போலிஸில் புகாரளித்தார். மறுநாள் நஜாடி சுட்டுக் கொள்ளப்பட்டார்.

ஜுஸ்தோ (Xavier Andre Justo)

ஜுஸ்தோ சிவிஸ் நாட்டு பிரஜை. 1MDB வழக்கில் முக்கிய நபராக கருதப்படுகிறார். இவரே சரவாக் ரிப்போர்ட்-க்கு 1MDB குறித்தும்; நஜிப் வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்ட 2.6 பில்லியன் பணம் குறித்தும் தகவல்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஜுஸ்தோ பெட்ரோ சவுடி(Petro Saudi International) நிருவனத்தில் உயர் அதிகாரியாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். IT துறையின் நிபுணரான ஜுஸ்தோ பெட்ரோ சவுடி நிருவனத்தின் IT துறையை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

பெட்ரோ சவுடியில் வேலை பார்க்கும் போது அங்கிருந்த முக்கியமான தகவல்களை திருடி வைத்து கொண்டார். பெட்ரோ சவுடி-1MDB Joint Venture(JV) கம்பனி குறித்து முழு தகவல்களும் ஜுஸ்தோவிடம் இருந்தது. 2011-இல் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

அங்கிருந்து வெளியேறிய ஜுஸ்தோ தாய்லாந்தில் ஹோட்டல் ஒன்று ஆரம்பிக்க தாய்லாந்துக்கு வந்தார். தம்மிடம் இருந்த 1MDB தகவல்களை வெளியிட போவதாக பெட்ரோ சவுடியை மிரட்டி பணபேரம்(Blackmail) செய்ததாக தாய்லாந்து போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

2.5 மில்லியன் சுவிஸ் நாட்டு கரன்சியில்(2.5 million SwissFrenc) பணம் கேட்டு மிரட்டியது தாய்லாந்து நாட்டு போலிசாரால் குற்றம் உறுதி செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த 2015 ஆக்ஸ்ட் மாதம் ஜுஸ்தோவுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில்தான் ரிலிஸ் செய்யப்பட்டார். மீண்டும் தொடங்கியுள்ள 1MDB வழக்கு விசாரணைக்காக அண்மையில் மலேசியா வந்து விட்டு போனார். போகும் வழியில் மகாதீரையும் சந்தித்து விட்டு போனார்.

1MDB-பெட்ரோ சவுடி Joint Venture(JV) கம்பனியில் முதலீடு செய்யப்பட்ட பணம் எப்படி கேமன் ஐலண்ட் தீவுக்கு(Cayman Virgin Island) போனது; அங்கிருந்து எப்படி சிங்கப்பூர் வந்தது; பிறகு எப்படி நஜிப் அம்பேங் வங்கி கணக்கில் புகுந்தது என்கிற முழு விபரமும்; 1MDB பணத்தை பயன்படுத்தி எப்படி முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டது என்கிற முழு விபரம் ஜுஸ்தோவுக்கு தெரியும்.

பணபரிவர்த்தனை நடந்த அனைத்து மின்னஞ்சல்களும் (E-mail) ஜுஸ்தோவிடம் இருந்தது.

தான்ஸ்ரீ லோடின் வாக் கமாருடின்
(Tan Sri Lodin Wok Kamaruddin)

1MDB தலைவர்(Pengerusi 1MDB) மற்றும் ராணுவ வீரர்கள் சேமிப்பு வாரிய தலைவர்(Lembaga Tabung Angatan Tentera LTAT) இந்த இரு அமைப்புக்கும் ஏக காலத்தில் தலைவராக இருக்கிறார். இதனால் ராணுவ வீரர்கள் அமைப்புக்கு சொந்தமான சில சொந்துக்களை 1MDB மிக சுலபமாக கையப்படுத்தியது.

இவரோடு ஏனைய சிலரும் 1MDB நிர்வாக செயல்முறை(Lembaga Pengarah 1MDB) குழுவில் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தான் ஸ்ரீ பதுக்கா இஸ்மாயி இஸ்மாயில், தான் ஸ்ரீ டத்தோ ஓங் கிம் ஹுவாட் மற்றும் அஸ்வின் ஜிதானண்ட் வலிராம் ஆகும்.

1MDB முறைகேடுகளில் நஜிப் மிக முக்கியமாக குற்றவாளியாக கருதப்படுகிறார். நஜிப் பல சம்பவங்களில் நேரடியாக தொடர்புப்படுத்தப் படுகிறார். ஆகவே நஜிப் குறித்து தனி கட்டுரை கடைசி பாகமாக.

1MDB முறைகேடுகள் எந்த-எந்த நாடுகளில் நடந்துள்ளது என்பது அடுத்த கட்டுரை. 1MDB முறைகேட்டினால், 140 வருட பழைமையான ஒரு சுவிஸ் வங்கியின் கிளையையே சிங்கப்பூரில் இழுத்து மூடியிருக்கிறார்கள்.

 

1எம்டிபி : நடந்தது என்ன?

-இது அநேகனின் வாசகர் மதியழகன் முனியாண்டியின் தனிப்பட்ட கருத்து இது அநேகனின் நிலைப்பாடு அல்ல.. ஆசிரியர்