கோலாலம்பூர், ஜூலை 19-
மைபிபி கட்சிக்கு சட்டப்பூர்வ தேசியத் தலைவர் தாம்தான் என்பதை ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக டான்ஸ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சட்டப்பூர்வமானவர்கள் என அது உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டான்ஸ்ரீ கேவியஸ் கூறுகையில், மைபிபிபி கட்சிக்கு நான்தான் அதிகாரப்பூர்வ தலைவர் என்று அறிவித்துள்ளது. இனி எனது தலைமைத்துவத்தில் கட்சியை சிறப்பாக வழி நடத்துவேன் என கட்சியின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தில் கலந்து கொண்டபோது செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்னையால் தேசிய முன்னணியிலிருந்து விலகுகிறோம் என்று டான்ஸ்ரீ கேவியஸ் அறிவித்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் டான்ஸ்ரீ கேவியஸ் கட்சியின் தலைவர் அல்ல அவரை நாங்கள் நீக்கிவிட்டோம் என்று டத்தோ மெக்லின் டி குரூஸ் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட தரப்பு அறிவித்தது. விசாரணை முடியும் வரை கட்சியின் தலைவராக டான்ஸ்ரீ கேவியஸ்தான் நீடிப்பார் என்று ஆர்ஓஎஸ் அறிவித்தது. அப்போது இரு தரப்பும் ஆண்டுக் கூட்டத்தை நடத்தினார்கள்.
கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக இருந்தால் அதனை தேசியப் பேராளர் மாநாட்டில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். கட்சியின் சட்டவிதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், என்னை அவர்கள் நீக்கியது முறையல்ல என்று டான்ஸ்ரீ கேவியஸ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கட்சியின் சொத்துகளை நான் அபகரித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் தமக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒரு தகவலை வெளியிடுவதற்கு முன்பு முழுமையாக ஆராய்ந்து தெளிவுப்படுத்திப் பின்னரே அதனை வெளியிட வேண்டும். அதே வேளையில், அந்தத் தகவல் குறித்து சிவில் மற்றும் குற்றவியல் அவதூறு தொடர்பாக ஆலோசனை பெற வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
பத்திரிகைகள், முகநூல், இணையப் பதிவேடுகள், அகப்பகங்கள் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் தமக்கும் தம்மை சார்ந்தவர்களுக்கும் எதிராக அவதூறு பரப்பியவர்கள் எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் பொது மன்னிப்பு கேட்க தவறினால் வழக்கு தொடுக்க தயாராக இருப்பதாகவும் இது தொடர்பாக தாம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் டான்ஶ்ரீ கேவியஸ் உறுதிப்படுத்தினார்.


