ஷா ஆலாம், செப். 3

ஒரு பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது வரம்பை 18ஆக உயர்த்தும் சிலாங்கூர் அரசின் பரிந்துரையைத் தாம் வரவேற்பதாக சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார். தற்போது நடப்பிலுள்ள விதிமுறையில் பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 16ஆகத்தான் இருக்கிறது.

இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவதற்குக் காரணம் மிகவும் இளம் வயதில் திருமணம் புரியும் ஒரு பெண்ணின் விளைவை எண்ணி எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதில் அந்த தம்பதியின் எதிர்காலம், அதனால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை நான் மிகவும் கடுமையானதாகக் கருதுகிறேன்.

அந்த வகையில் சிலாங்கூர் மாநில ஆண் குறைந்தபட்ச திருமண வயதை 16லிருந்து 18ஆக உயர்த்தும் மாநில அரசின் பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் சிலாங்கூரில் தற்போது நடப்பிலுள்ள இஸ்லாமியர்களுக்கானச் சட்டத்தை மறுஆய்வுச் செய்யும்படி மாநில இஸ்லாமிய மன்றம் மற்றும் மாநில இஸ்லாமியத் துறை ஆகியவற்றுக்கு நான் உத்தரவிடுகிறேன் என்று 14ஆவது மாநில ஆட்சிக் குழுவின் முதல் தவணைக் கூட்டத்தில் உரையாற்றிய போது சுல்தான் ஷாராபுடின் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஷரியா நீதிமன்றத்தில் இந்தக் குறைந்த வயது திருமணத்தை அனுமதிக்கும் செயல்முறையைச் சீரமைத்துத் திருத்தம் செய்ய மனநல, உடல்சார்ந்த, கருத்தரிப்பு, ஒழுக்கம், சமூகவியல் போன்றவற்றிற்கு ஒருசில சட்ட விதிகளையும் திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதிலும் இத்திருமணம் எந்தவொரு பாதிப்புமின்றி சம்பந்தப்பட்டவரைக் கட்டாயப்படுத்தாமல் அவரது ஒப்புதல் மூலம் நடைபெற்று இவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் சிலாங்கூர் மாநில இஸ்லாமியக் குடும்பச் சட்டம், சிலாங்கூர் மாநில ஷரியா நீதிமன்ற செயல்முறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இவ்விரு திருத்தங்களும் இம்முறை நடைபெறும் ஆட்சிக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என சுல்தான் ஷாராபுடின் மேலும் கூறினார்.

இந்த குறைந்த வயது திருமண விவகாரம் கிளந்தான் மாநிலத்தில் அண்மையில் 11 வயது கொண்ட ஒரு சிறுமி 41 வயது கொண்ட ஆடவரைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து பரபரப்பானது. இந்த சிறுமி அந்த ஆடவருக்கு 3ஆவது மனைவியாவார்.