கோலாலம்பூர், செப். 3-

தமிழர்களின் முதன்மை தற்காப்பு கலையான சிலம்பத்தை மலேசிய தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் கொண்டாட வேண்டும். அதற்காக செப்டம்பர் 26ஆம் நாளை உலக சிலம்ப நாளாக சிலம்பக் கலை வள்ளுநர்கள் அனுசரிக்க வேண்டும் என மலேசிய மகா சிலம்ப குத்துவரிசை இயக்கத்தின் தலைவர் மகாகுரு மகாலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

இன்றளவும் தமிழர்களின் பாரம்பரிய கலையாக சிலம்பம் விளங்கி வருகிறது. தமிழர்கள் வாழும் இடம் எல்லாம் இந்த சிலம்ப கலை இன்னமும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அந்த வரிசையில் மலேசிய தமிழர்கள் சிலம்பத்திற்கு முக்கியத்துவம் தந்து தங்கள் பிள்ளைகளுக்கு அதனை போதித்து வருகிறார்கள்.

இனி வரும் காலங்களிலும் சிலம்பக் கலை தொடர்வதற்கு இளைய சமுதாயத்தினரிடையே இக்கலை குறித்த முழு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என மகாகுரு மகாலிங்கம் வலியுறுத்தினார்.

மற்ற தற்காப்பு கலைகளுக்கு இருக்கும் அங்கீகாரம் சிலம்ப கலைக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நீண்ட காலம் போராட்டமாக உள்ளது. இந்த ஒரு சூழ்நிலையில் செப்டம்பர் 26ஆம் நாளை உலக சிலம்ப தினமாக அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம். அன்றைய தினம் சிலம்பத்தை கற்றுத் தேர்ந்தவர்கள், சிலம்பத்தை கற்றுக் கொண்டிருப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு அக்கலையை வெளிப்படுத்தி இந்த நாளை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

1976ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மலேசியாவில் முதன் முறையாக சிலம்பக் கழகம் பதிவு செய்யப்பட்டது. சிலம்பக் கலைக்கு கிடைத்த இந்த மாபெரும் அங்கீகாரத்தை நினைவு கூறும் வகையில் அன்றைய நாளை நாம் உலக சிலம்ப தினமாக அனுசரிக்க உள்ளோம் என மகாகுரு மகாலிங்கம் கூறினார். நாட்டில் நிறைய சிலம்பக் கழகங்கள் உள்ளன. அக்கழகங்களின் மாணவர்களும் இணைந்து இத்தினத்தை கொண்டாட வேண்டும். செப்டம்பர் 26 புதன்கிழமை என்பதால் மிகப்பெரிய நிகழ்ச்சிகளை நடத்த முடியாது.

இருந்தபோதிலும் யாரெல்லாம் சிலம்பக் கலையை பயில்கிறார்களோ அவர்கள் சிலம்பத்தை சுத்த வேண்டும். இதுவே எங்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது. வரும் காலங்களில் இந்த உலக சிலம்ப நாள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் அதே வேளையில் சிலம்பக் கலை பயில்கின்றவர்களிடையே நல்லதொரு நட்புறவையும் இது வளர்க்கும் என மகாகுரு மகாலிங்கம் கூறினார். மேல் விவரங்களுக்கு சங்கத்தின் செயலாளர் சந்திரபிரகாஷை 011 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.