கோலாலம்பூர், செப். 3-

ம.இ.கா.வின் இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கட்சியின் இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் பரமசிவத்திற்கும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஜோகூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் சுப்ரமணியம் பாலகிருஷ்ணனுக்கும் பிளவுபடாத ஒருமித்த ஆதரவு வழங்குவதாக ஜோகூர் மாநில இளைஞர் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜோகூரிலுள்ள 25 தொகுதிகளும் ஒருமனதாக இந்த இருவருக்கும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன.

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்திற்கு புனிதனால் நிச்சயம் உறுதுணையாக இருக்க முடியும் என்பதோடு அவரின் வழிகாட்டலில் இளைஞர் பகுதியை ஆக்ககரமாக செயல்படுத்தும் தலைமைத்துவமும் அவரிடம் உள்ளது என ஜோகூர் மாநில இளைஞர் பகுதியின் துணைத் தலைவர் சத்தியசீலன் ரெங்கசாமி கூறியுள்ளார்.

கட்சியின் மேம்பாட்டிற்கு வித்திடும் வகையில் ஆக்ககரமான செயல்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய தலைமைத்துவம் இளைஞர்களுக்கு தேவைப்படுகின்றது. அந்த தலைவரின் வழிகாட்டலில் ம.இ.கா. இளைஞர் பகுதி மீண்டும் புதுப்பொலிவு பெறும் என சத்தியசீலன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில இளைஞர்களை பொறுத்தவரை புனிதனும், சுப்ரமணியமும் ம.இ.கா.வின் இளைஞர் பகுதியின் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என எண்ணுகிறார்கள். மலேசிய இந்தியர்களின் சவால்களை அறிந்து அதற்கேற்ப இளைஞர்களை வழிநடத்தக்கூடிய பக்குவம் அவர்களுக்கு உண்டு என கட்சியின் இளைஞர்கள் நம்புகிறார்கள்.

இந்த இருவரின் தலைமைத்துவத்தில் ஆளும் கட்சிக்கு சவால் விடும் சிறந்த எதிர்க்கட்சியாக ம.இ.கா. செயல்பட வாய்ப்புள்ளதாக ஜோகூர் மாநில இளைஞர் பகுதி கருதுகின்றது. அதனால், அவர்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் புனிதன் பரமசிவத்திற்கும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுப்ரமணியம் பாலகிருஷ்ணனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர் என ஜோகூர் மாநில ம.இ.கா. இளைஞர் பகுதியின் துணைத் தலைவர் சத்தியசீலன் கூறியுள்ளார்.

முன்னதாக மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் தினாளன் ராஜகோபால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேளையில் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் கஜேந்திரன் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.