கோலாலம்பூர், செப். 3-
எஸ்எஸ்டி அமலாக்கத்தால் பொருட்களின் விலை உயர்வு காணாமல் அரசு கண்காணிக்க வேண்டும் என்று பேரின்பம் மலேசியாவின் ஆசோசனை மன்ற உறுப்பினர் யு. தாமோதரன் வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்பட்ட போது பொருட்களின் விலைகள் உயர்வு கண்டன என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்பொருட்களின் விலைகள் உயர்வு கண்ட போது, அது பொதுமக்களுக்கு மிகப் பெரிய சுமையாக இருந்தது என தாமோதரன் குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் ஆட்சி கவிழ்வதற்கு இந்த ஜிஎஸ்டி மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்தவொரு சுழ்நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
எஸ்எஸ்டியால் பொருட்களின் விலைகள் குறையும் என பொதுமக்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் எஸ்எஸ்டி அமலுக்கு கொண்டு வந்த நாள் முதல் பல பிரச்னைகள் தலைத்தூக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக பொருட்களின் விலைகள் உயர்வு கண்டுள்ளன என பொதுமக்கள் புகார்களை முன்வைத்து வருகின்றனர். சாதாரண உணவகங்களில் கூட எஸ்எஸ்டி வசூல் செய்யப்படுகிறது என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
ஆகையால் இவ்விவகாரம் குறித்து அரங்ாங்கம் முழு ஆய்வுகளை செய்ய வேண்டும். எஸ்எஸ்டியால் பொருட்களின் விலை உயராமல் இருப்பதை அரசாங்கம் கண்காணிப்பதுடன் அப்பிரச்னைகளுக்கு தீர்வுக்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விலைகள் உயர்த்தும் தரப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யு.தாமோதரன் கேட்டுக் கொண்டார்.

