கோத்த கினபாலு, செப்.4
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 30,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகளைக் குடிநுழைவுத் துறை கைது செய்திருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார்.
இதில் அவர்களை வேலைக்கு வைத்துக் கொண்ட 1,000க்கும் மேற்பட்ட முதலாளிமார்களும் அடங்குவர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 10,000க்கும் மேற்பட்டச் சோதனை நடவடிக்கைகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அந்நியர்கள் மீது செய்யப்பட்ட சோதனைகளிலிருந்து கிடைத்த ஒரு வெற்றியாகும் என்று முஸ்தபார் அலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கு முன் தானாகச் சரணடையும் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 30ஆம் தேதி வரை சட்டவிரோதக் குடியேறிகளுக்குக் குடிநுழைவுத் துறை வாய்ப்பளித்தது. அந்த கால அவகாசம் முடிவுற்றதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த ஜூன் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட சட்டவிரோதக் குடியேறிகளை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் திட்டத்தை ஏராளமானோர் பின்பற்றவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


