கோலாலம்பூர், செப்.6-

தேசிய முன்னணி அதிகாரத்தை இழந்த தினத்தின் இரவு ஒரு கூட்டணி ஏற்பாட்டை செய்து கொள்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தம்மை தொடர்பு கொண்டு பேசியதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

துன்டாக்டர் மகாதீர் முகமதுவிடம் பேசுங்கள் என நான் கூறிய பிறகு நஜீப் மௌனமாகிவிட்டார் என்று பிகேஆர் பொது தலைவரான அன்வார் குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் (தே.மு.) மனநிறைவு கொள்ளவில்லை. ஆகவே, சில வகையான ஏற்பாட்டை செய்வதற்கு சாத்தியம் உள்ளது என்று நஜீப் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார் என்று அன்வார் சொன்னார்.

இறுதியாக, இதோ பாருங்கள் நான் இன்னும் சிறையில் தான் உள்ளேன். நீங்கள் எனக்கு செய்யும் கடைசி தொலைபேசி அழைப்பு இதுதான். இதன் பிறகு மகாதீருடன் பேசுங்கள் என்று அவரிடம் தெரிவித்து விட்டேன் என்று அன்வார் குறிப்பிட்டார். அதற்கு பிறகு அவர் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார் என்று அன்வார் தாய்லாந்து பிபிஎஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சுதிசாய் யூன் எனும் செய்தியாளர் அன்வாரை பேட்டி கண்டார். 14ஆவது பொது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின் தேசிய முன்னணியுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் சாத்தியத்தை முற்றாக நிராகரித்துவிட்டீர்களா என்று அன்வாரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அன்வார் தேர்தல் முடிவை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நஜீப்பிடம் தெரிவித்தேன். அதன் பிறகு பேசலாம் என்று கூறிவிட்டேன் என்றார்.

விவாதிக்கவும் பேச்சு நடத்தவும் நஜீப் தயாராக இருந்ததை அவரே கோடி காட்டினார் என்று அன்வார் கூறினார். ஆனால் நான் இதனை பொருட்படுத்தவில்லை. எங்களுக்கு மிகத் தெளிவான அதிகாரம் கிடைத்தது. பெரும்பான்மையில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆகவே பேச்சு வார்த்தை குறித்து பிறகு யோசிக்கலாம் என நஜீப்பிடம் கூறிவிட்டேன் என்றார் அவர். நீங்கள் விரும்பினால் மகாதீரிடம் பேசுங்கள் என்று நான் கூறியபோது அவர் மௌனமாகவே இருந்தார் என்று அன்வார் சொன்னார்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள் என நஜீப்பிடம் நான் ஆலோசனை கூறியபோதும் அடுத்தநாள் காலை வரை அவர் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் காலை 11.00 மணி வரை தோல்வியை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்தார் என்று அன்வார் தெரிவித்தார்.