கோலாலம்பூர், செப்.6-

தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் குறித்து எம்.டி.யு.சி. எனப்படும் மலேசிய தொழில் சங்க காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் நாட்டில் உள்ள 1 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் நம்பிக்கை கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது பி40 பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று எம்.டி.யு.சி. தலைமைச் செயலாளர் ஜெ.சாலமன் கூறினார். புதிய அரசாங்கம் பதவி ஏற்ற போதிலும் பி40 பிரிவு மக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறினார். 2019 ஜனவரி முதல் தேதியிலிருந்து குறைந்த பட்ச சம்பளம் மாதம் 1,050 வெள்ளியாக அதாவது மணிக்கு 5 வெள்ளி 5 காசாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என புத்ரா ஜெயா நேற்று அறிவித்தது.

தொழிலாளர்களுக்கான 1,000 வெள்ளி சம்பளத்தில் 50 வெள்ளி உயர்த்தப்பட்டிருப்பது மிகச் சிறிய தொகையாகும். சபாவில் 1,180 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சம்பளத்தில் 130 வெள்ளி வரை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. சபா , சரவாக்கில் மக்கள் இன்னும் வறுமை கோட்டில் இருப்பதை கவனிக்க வேண்டும் என்று அவர் சொன்னார். இந்த குறைந்த பட்ச சம்பள விகிதம் ஏழை தொழிலாளர்களின் நலன் கவனிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது.

நம்பிக்கை கூட்டணி தங்கள் நலனை முழுமையாக பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில்தான் தொழிலாளர் வர்க்கத்தினர் அந்த கூட்டணியை ஆதரித்தனர். குறைந்த சம்பளம் வாழ்க்கைச் செலவின உயர்வு ஆகியவற்றோடு ஏழை தொழிலாளர்கள் நிம்மாதியான வாழ்க்கையை வாழ முடியாது என்று சாலமன் சுட்டிக்காட்டினார்.