கோலாலம்பூர், செப். 7
ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் பாண்டிச்சேரியில் உள்ள சங்கமித்ரா மாநாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய விருந்தினர்களாக கயானா நாட்டு பிரதம அமைச்சர் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் நாட்டு குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, பாண்டிச்சேரி ஆளுநர் திருமதி.கிரண்பேடி, பாண்டிச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி, தமிழ்நாட்டின் அமைச்சர்கள், கே.பாண்டியராஜன், எம்.சி.சம்பத், பப்போகைனா நாட்டு ஆளுநர் திரு.சசிதரன் முத்துவேல், இலங்கை அமைச்சர் திரு.இராதாகிருஷ்ணன், தென் ஆப்பிரிக்கா அமைச்சர் ரவி பிள்ளை ஆகியோர் உறுதி செய்துள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, மலேசிய அமைச்சர்கள், சிங்கப்பூர் அமைச்சர்கள் வர இருக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தொழிலதிபர்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், பட்டயக் கணக்காளர்கள், மேலாண்மை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், விழை தொழில்புரிவோர், சுய வேலை வாய்ப்பில் ஈடுபடும் இளைஞர்கள், தொழில்துறையில் வெற்றிக்கொடியை நாட்டியவர்கள் சந்திப்புக்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்து வர்த்தகம் பெருக, முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார வளர்ச்சிக்காக விழை தொழிலை வகுத்தளிக்கவும் உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துவதை இம்மாநாடு குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
கொள்கை வகுப்பவர்கள், அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், அமைச்சர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோரை ஒன்று சேர்த்து ஒவ்வொருவரது வாழ்வு மலர என்ன செய்யலாம் என்பது குறித்த விவாதம் மேற்கொண்டு அமைதி, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்பாடுவது மாநாட்டின் நோக்கமாகும். இந்த மாநாடு சிறப்பு வாய்ந்த மூன்று நாள் அமர்வினைக் கொண்டிருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடியதாக அமையும்.
எந்த ஒரு தமிழரும் தவறவிடக்கூடாத ஒன்றாகும். மாநாட்டில் பல்வேறு சிறப்புப் பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டு முதல்நிலைத் தகவல்களை அனைவருக்கும் வழங்க உள்ளனர். அது அவர்களது அனுபவம், திறமைகளை வெளியிடும் வகையில் அமைந்ததாகும். அனைத்துப் பேராளர்களும் இதனைச் செவிமடுக்கலாம். இம்மாநாட்டில் தொழில் முனைவோர் வர்த்தகத் துறையினர் தத்தம் தொழில் வளர்ச்சிக்காக வங்கிகள் நிதி நிறுவனங்கள், நிதியுதவி செய்யும் அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற வசதி வாய்ப்புகள் செய்து தரப்படும்.
பொருளாதார வளர்ச்சியை எட்ட பல்வேறு நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள் விழை தொழில் புரிய வாய்ப்புகளை வகுத்தளித்தல் போன்றவை இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும். பண்பாட்டுக்குழுக்கள், ஆலயக் குழுவினர், வணிக நிறுவனங்கள் அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றுடன் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்திக் கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தல் போன்றவை மாநாட்டின் முக்கியப் பணியாகும்.
உலக நாடுகளில் வசிக்கும் சிறப்பம்சம் பொருந்திய தமிழரை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கிச் சிறப்புச் செய்தல் போன்ற பணிகள் மாநாட்டில் இடம் பெறும். மாநாட்டின் மூன்று நாள் அமர்விலும் பொருட்காட்சி நடைபெறும். பெரிய, நடுத்தர, சிறு, குறு தொழில் அதிபர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும். மாநாட்டில் மூன்று நாட்களிலும் பல்வேறு கலாசாரக் குழுவினர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் நடைபெற உள்ளது.
முதலாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் 2009ஆம் ஆண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. மீண்டும் மூன்றாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள டர்பன் மாநகரத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்த ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு உலகத் தமிழர் பொருளாதார மையத்தின் மூலமாகவும், வளர்ச்சிக்கழகத்தின் மூலமாகவும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 முதல் 14 வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு புதுச்சேரி மாநில அரசும், புதுச்சேரி பல்கலைக்கழகமும், இதர மாநில அரசுகளும் இந்திய அரசும், பல்வேறு வெளிநாட்டு அரசுகளும் உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களும், தொழிலதிபர்களும் விழை தொழில் புரிவோரும் கல்வியாளர்களும் ஒத்துழைப்பு தர இசைந்துள்ளனர். இந்த மாநாட்டு செய்தியினை www.economicconference.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என உலகத் தமிழர் பொருளாதார மையத் தலைவரும் மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித்துக் கொள்கிறார்.

