கோலாலம்பூர், செப் 8
சிலாங்கூரில் பலாக்கோங் மற்றும் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடந்த மாதம் சுங்கை கண்டிசில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று பலாக்கோங் மற்றும் ஸ்ரீ செத்தியாவில் நடைபெறுகிறது.

பலாக்கோங் சட்டமன்ற தொகுதியில் பதிவு பெற்ற 62,188 வாக்காளர்களும் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதியில் 50,722 பதிவு பெற்ற வாக்காளர்களும் உள்ளனர்.

இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய  மாலை 5.30 மணி வரை வாக்களிப்பு நடைபெறும். இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவு இன்றிரவு 10 மணிக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலாக்கோங் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜ.செ.கவைச் சேர்ந்த வோங் சியு கி, தேசிய முன்னணியின் மசீச வேட்பாளர் டான் சீ தியோங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, ஸ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பானின் ஹலிமி அபு பாக்கார் மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஹலிமா அலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த மே மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலில் அந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.