ஈப்போ, செப்.10-
சந்தைகளில் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டுத் தீர்வு குறித்து அடுத்த மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் துணை அமைச்சர், டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டுத் துறை அமைச்சு, பொருளாதார விவகாரத் துறை அமைச்சு ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சு கடந்த மாதத்தில் கலந்தாலோசித்து விட்டது. அதனால் அடுத்தாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இதற்கானத் தீர்வு அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மருந்துகளின் விலை 10 அல்லது 20 விழுக்காடு உயர்வது சாதாரணமான ஒன்றுதான். அதனால் பொதுவான மருந்துகளைப் பயன்படுத்த அமைச்சு இப்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த மருந்துகள் விலை உயர்வுக்கு வெளிநாடுகளில் பயன்படுத்தும் அணுகுமுறைகள் இந்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் ஒரு முக்கியக் காரணமாகும் என்று மருந்தகம் மற்றும் சுகாதார அறிவியலுக்கான 2ஆவது அனைத்துலக மாநாட்டைஅதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கோப்பெங் தொகுதி எம்.பியுமான லீ குறிப்பிட்டார்.


