அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வார் போட்டியிட 2 நாடாளுமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன! -டத்தோ சைஃபுடின் நசுதியோன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

அன்வார் போட்டியிட 2 நாடாளுமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன! -டத்தோ சைஃபுடின் நசுதியோன்

அலோர்ஸ்டார், செப்.10-

பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாளை மறுநாள் ஹாங்காங்கில் இருந்து தாயகம் திரும்பிய பின்னரே அவர் போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் டத்தோ சைஃபுடின் நசுதியோன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கிற்குப் புறப்படுவதற்கு முன்பு தான் போட்டியிடவிருப்பதற்குப் பொருத்தமான தொகுதியை அடையாளம் காணும்படி அன்வார் தன்னைக் கேட்டுக் கொண்டதாக சைஃபுடின் கூறினார்.

அன்வாரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக மூன்று தொகுதிகள் தயாராக உள்ளன. எனினும், அவற்றை இன்று இரண்டாகக் குறைத்தோம்” என்றார் சைஃபுடின்.

நேற்று அன்வார் என்னிடம் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் குறித்து பேசினார். நான் இப்போது சில பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார் உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சருமான அவர்.

தான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஹாங்காங்கில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் முடிவு செய்யக் கூடும்” என்று இங்கு விற்பனை மற்றும் சேவை (எஸ்எஸ்டி) வரி அமலாக்கம் மீதான சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசி சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

ஊடகங்களில் வெளிவந்ததைப் போல அன்வார் வட தீபகற்ப மாநிலங்களில் போட்டியிடமாட்டார். அது வெறும் ஆருடமே என்றும் சைஃபுடின் குறிப்பிட்டார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களுக்கு ஆலோசனை கூறிய அவர் எந்தவொரு அறிவிப்பும் கட்சியின் அதிகாரப்பூர்வ தரப்பான தலைமைச் செயலாளர்தான் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன