வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சீமராஜாவில் சூரிதான் ராஜா! விமர்சனம்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சீமராஜாவில் சூரிதான் ராஜா! விமர்சனம்

சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் 3ஆவது திரைப்படமாக சீமராஜா விநாயகர் சதுர்த்திக்கு வெளியீடு கண்டது. தளபதி விஜய் தல அஜித் ஆகியோருக்கு அடுத்து முதல் நாள் வசூலில் சிவகார்த்திகேயனின் இணைந்து கொண்டுள்ளார். ஆனால் இந்த சீமராஜாவில் மக்கள் மனதை வென்றாரா என்பதுதான் முதன்மைக் கேள்வியாக முன்வைக்கப்படுகின்றது.

வருத்தப்படாத வாலியர் சங்கம், ரஜினி முருகன் திரைப்படங்களுக்குப் பிறகு பொன்ராம் இயக்கியுள்ள திரைப்படம் சீமராஜா. ஊருக்கு ராஜாவாக இருக்கும் நெப்போலியனின் மகன் சிவகார்த்திகேயன். அவர் பெயர்தான் சீமராஜா. முன்னணி நடிகர்களைப் போல இவருக்கும் மாஸ் ஓப்பனிங் இத்திரைப்படத்தில் உண்டு. சண்டைக்கு பிறகு ஒரு குத்து பாடலுக்கு நடனமும் ஆடுகிறார்.

வழக்கம் போலவே பக்கத்து ஊரில் இருக்கும் வில்லனுக்கும் ராஜா குடும்பத்திற்கும் பிரச்னை. இதனால் சந்தை மூடப்படுகின்றது. இந்த சந்தை திறக்கப்படுமா என்பதுதான் கதை என நீங்கள் நினைத்தால் எங்களை போல நீங்களும் ஏமாளிகள்தான்.

சந்தையை திறக்க மல்யுத்த போட்டி வைக்கிறார்கள். அதில் சீமராஜா வெல்கிறார். அப்போது ராஜாவிடம் காதலை சொல்ல வரும் சமந்தாவின் உண்மையான அப்பா வில்லன் என்பது தெரிய வருகின்றது. அவரை வீட்டில் காவல் வைக்கிறார். அவரை சீமராஜா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை எனவும் நீங்கள் நினைக்கக்கூடாது.

இச்சூழ்நிலையில் கிராமத்தில் உள்ள நிலங்களை விற்பதற்கு வில்லன் திட்டம் போடுகிறார். இதனால் தாம் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை சீமராஜாவிற்கு ஏற்படுகின்றது. பின்னர் பிற்பாதியில் ராஜா வம்சம் குறித்த பிளாஷ்பேக். விவசாய நிலத்தை விற்கக்கூடாது என சீமராஜா போராடுகிறார். நிலத்தை காப்பாற்றினாரா? சமந்தா என்னவானார் என்பதே மீதி கதை. (இது கதையா என நினைக்கக்கூடாது)

சிவகார்த்திகேயன் அப்படியே இருக்கிறார். எந்த மாற்றமும் இல்லை. நடிப்பிலும் நடனத்திலும் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டார். ஆனால் கதையில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது. இந்த சீமராஜா திரைப்படத்தின் நாயகன் சூரிதான். அவர் வந்தாலே திரையரங்கில் விஷில் பறக்கின்றது.

ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களம். சிக்ஸ் பெக் காட்டுவதாகட்டும். சிறுத்தையிடம் மாட்டிக் கொள்வது என அனைத்து காட்சியிலும் தனியாகத் தெரிகிறார். அவர் இல்லாமல் போனால் சீமராஜா கோமா ராஜாவாகியிருப்பார். சமந்தா அழகாக இருக்கிறார். திமீர் காட்டுவதாகட்டும் அல்லது கண்களில் தனது காதலை வெளிப்படுத்தும் இடம் அழகு.

மாவீரன் நெப்போலியன் என அடையாளப் படுத்திவிட்டு, காமெடியாக்கிவிட்டார்கள்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த சிம்ரன் ஏன் வந்தார் என கேட்கும் படியாக உள்ளது அவரது காட்சிகள். கத்திப் பேசும் எல்லா கதாபாத்திரமும் நீலம்பரியாகிவிட முடியாது. அதற்கு காளீஸ்வரி நல்ல உதாரணம். இசை டி.இமான். பாடல்களைக் கேட்டவுடன் தெரிந்துவிடும். இதற்கு முன்னாள் கேட்ட அத்தனை பாடல்களையும் மீண்டும் புதுப் பொலியுடன் கொடுத்துள்ளார்.

பொன்ராம் தமது கதைக்களத்தை மாற்றி அமைக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. இல்லையென்றால் எம்.ராஜேஸ் போல் கூடிய சீக்கிரமே காணாமல் போகலாம் (சிவா மனசில சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்பட இயக்குநர்)

வருத்தப்படாத வலிபர் சங்கம், ரஜினி முருகன் திரைப்படங்களில் பயன்படுத்திய அதே காட்சிகள். நடிகைகள்தான் வேறு. பிற்பாதியில் வரும் பிளாஷ்பேக் எதற்கு என்றே புரியவில்லை. வரலாற்றுப் படங்களில் நடிக்க சிவகார்த்தியேன் தகுதியானவர் என்பதை உணர்த்தவா? என்ற கேள்வியும் எழுந்தது. கதைக் களத்தை மாற்றி மாற்றி படம் எப்போது முடியுமென்ற சிந்தனையே வந்துவிட்டது.

தோற்றத்தில் ரஜினிகாந்தையும் விஜய்யையும் நினைவுப் படுத்தும் சிவகார்த்திகேயன் படம் முழுக்க தல அஜித் புராணம் பாடுகிறார். இதெல்லாம் வைத்து படத்தை நகர்த்த முடியாது சிவா. கடின உழைப்பின் அடையாளமாக இந்த உயரத்தில் இருக்கின்றீர்கள். அதே உழைப்பை கதை தேர்விலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இருப்பினும் இந்த சீமராஜாவை நகைச்சுவைக்காக மட்டும் பார்க்கலாம்.

மொத்ததில் சீமராஜாவில் சூரி மட்டுமே ராஜா!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன