ஸ்ரீ கெம்பாங்கான், செப். 16-

தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக ஐபிஎப் இணைத்துக் கொள்ளப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.

கட்சியை உருமாற்றம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. பழைய சித்தாந்தத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அது மக்கள் மத்தியில் அதிருப்தியை கொண்டு வரும். அதனால் புதிய வழிமுறைகளை அடையாளம் கண்டு நடைமுறைகளை மாற்றியமைக்கும் செயல் திட்டங்களை தேசிய முன்னணி முன்னெடுக்கும் என அதன் தலைவருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் உறுதியளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஐபிஎப் கட்சியின் 28ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், மேற்கண்டவாறு கூறினார். தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக ஐபிஎப்பை இணைத்துக் கொள்ள வேண்டும் என அதன் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் முன் வைத்த கோரிக்கைக்கு தமதுரையில் ஸாயிட் பதிலளித்தார். 14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன் தேசிய முன்னணியில் 13 உறுப்புக் கட்சிகள் இருந்தன. தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்ட பிறகு 8 கட்சிகள் அக்க்கூட்டணியிலிருந்து விலகி விட்டன.

தற்போது தேசிய முன்னணியில் 5 உறுப்புக் கட்சிகள் மட்டுமே அங்கத்துவம் பெற்றுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஐபிஎப் தொடர்ந்து தேசிய முன்னணியுடன் பயணிக்கின்றது. அவர்களின் விசுவாசத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். உலக அரங்கில் ஆட்சி அதிகாரத்த இழந்த கட்சிகள் தங்களின் கூட்டணி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள். அப்படி மாற்றத்தை முன்னெடுத்தவர்கள் மக்களின் அபிமானத்தை பெற்று மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார்கள்.

இதே வழிமுறையில் தேசிய முன்னணி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரும் பட்சத்தில் தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக ஐபிஎப் இணையும் அதோடு தேர்தலில் போட்டியிடுவதற்கும் அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என டத்தோஸ்ரீ ஸாயிட் உறுதியளித்தார். தேசிய முன்னணியின் மேம்பாட்டிற்கு ஐபிஎப் தொடர்ந்து பங்காற்றி வருகின்றது. தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தை கொண்டிருந்ததற்கு ஐபிஎப் கட்சியும் முதன்மைக் காரணம். அந்த நன்றியை நாங்கள் எப்போதும் நினைத்து பார்க்கின்றோம். கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐபிஎப்பை உறுப்புக் கட்சியாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை முடுக்கி விடப்படும் என டத்தோஸ்ரீ ஸாஹிட் உறுதியளித்தார்.