கோலாலம்பூர், செப். 16-
சிவகார்த்திகேயன் கூட்டணியில் 3ஆவது திரைப்படமாக வெளியீடு கண்டிருக்கும் சீமராஜாவை மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்னதாக கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் என்யூ சென்ட்ரல் திரையரங்கம் ஜோகூர் பாரு, எல்எப்எஸ் ஸ்கூடாய், எல்எப்எஸ் சித்தியவான் ஆகிய திரையரங்குகளில் மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்திருந்ததது.
முதன்மையான 3 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த சிறப்புக் காட்சியை காண 300க்கும் அதிகமான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூடினார்கள். குறிப்பாக தலைநகர் என்யூ சென்ட்ரலில் ஒளியேறிய சிறப்புக் காட்சிக்கு முன்னதாக சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தினர் ரசிகர்களை வரவேற்று மகிழ்வித்தனர். பின்னர் அவர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கிய அவர்கள் திரைப்படம் குறித்து கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

சீமராஜா திரைப்படம் தொடங்கியதும் சிவகார்த்திகேயன் அறிமுகமாகும் காட்சியின் போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். படம் நகைச்சுவையாக இருந்ததால் இடைவிடாத சிரிப்பொலியும் திரையரங்கை அதிர வைத்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என 2 வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் கூட்டணியின் 3ஆவது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அதோடு, இப்படத்தில் சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மனோபாலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். டி.இமான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே புகழ் பெற்று விட்டதால் திரையரங்குகளில் அந்த பாடல் காட்சிகள் ஒளியேறும் போது அரங்கத்தில் இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அப்பாடலை பாடுவதை உணர முடிந்தது.
சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் பலதரப்பட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் ஷக்கினா தெரிவித்தார். அதே நேரத்தில் திரைப்படத்தை மட்டும் கொண்டாடாமல் இதர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைப் போல இத்திரைப்படமும் வெற்றி பெறும் என குறிப்பிட்ட ஷக்கினா, இந்த சிறப்பு காட்சியில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


