ஸ்ரீ கெம்பாங்கான், செப். 16-

தேசிய முன்னணியில் தோழமைக் கட்சிகளாக இருக்கும் கட்சிகளுக்கு உயரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டிய தருணம் இதுவென மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் செய்த தவறை இனியும் தொடரக்கூடாது. தவற்றை உணர்ந்து அதை திருத்திக் கொள்ள மக்கள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நான் மட்டுமே தலைவன் என்று கூறுபவர்களுக்கு இனி இடம் இல்லை என்பதை கடந்த பொதுத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது. கட்சி அடிப்படையில் தொகுதி ஒதுக்கீடு வழங்குவது தவறு என்பதை கடந்த பொதுத்தேர்தல் சுட்டிக் காட்டியுள்ளது. வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதுதான் முக்கியம். அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

தோழமைக் கட்சிகள் திறன்பட செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை இழந்த நேரத்திலும் விசுவாசத்துடன் இருந்தால் அவற்றை தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்வதை தவிர மிகச் சிறந்த நடவடிக்கை இருக்காது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மக்கள் யாரை தலைவன் என்று தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள்தான் இனி வரும் காலத்தில் அரசியலில் மேம்பாடு காண முடியும். அந்த அடிப்படையில் தனிநபர் ஆதிக்கத்தை புறந்தள்ளி வைத்து விட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றும் மனப்பக்குவத்தை கொண்டிருப்பவர்களை தேசிய முன்னணி அரவணைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் சக்தி கட்சியை பொறுத்தவரை தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இணைவது எங்களின் நோக்கம். அதை நோக்கியே பயணத்தை மேற்கொள்கின்றோம். அப்படி அந்நடவடிக்கை வெற்றி அடையாவிட்டால் 15ஆவது பொதுத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சியும் தனித்து போட்டியிடும் என அவர் கூறினார்.

14ஆவது பொதுத்தேர்தலிலும் சில தொகுதிகளில் போட்டியிட மக்கள் சக்தி கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால், தேசிய முன்னணியில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு அந்த நடவடிக்கை முன்னெடுக்கவில்லை. ஆனால் இப்போது அனைத்து உருமாற்றம் கண்டுள்ளது.

இந்த உருமாற்றத்தில் தேசிய முன்னணியும் பெரும் அளவு மாற்றம் காண வேண்டும். அந்த மாற்றமே மக்கள் மனதில் நம்மை நிலைப் பெறச் செய்யும். இனியும் பழைய சித்தாந்தத்தை கடைப்பிடித்தோம் என்றால் மக்களை நெருங்குவது முடியாத காரியமாகி விடும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் நினைவுறுத்தினார்.