சிங்கப்பூர், செப். 17 –
அடுத்த பிரதமராவதற்குத் தாம் அவசரப் படவில்லை என பிகேஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மகாதீர் பதவி விலகி, அதனை தம்மிடம் அளிக்க இணக்கம் கண்டிருப்பதாகவும் அதுவே இறுதியில் கடைப்பிடிக்கப்படும் என்றும் அதுவரை மகாதீர் நாட்டிற்கு எது நல்லதோ அதனைச் செய்ய விட்டுவிடுவதே சிறப்பு என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் பிரதமராவதற்குத் தாம் அவசரப்படுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நாட்டின் நிர்வாகத்தைச் சீர்படுத்தவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் தற்போது கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாகவும் அது பலனளிக்கும் வரை தாம் கத்திருக்கப் போவதாகவும் சிங்கப்பூரில் எஸ்.ராஜரத்தினம் அறவாரிய கலந்துரையாடலில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அம்னோ கூட்டணி வைக்க பிரிபூமி பெர்சத்துவிடம் பேசியது பற்றிக் கேட்கப்பட்டபோது, அது பற்றிக் கவலையில்லை என்றும் அவர்கள் யாருடனும் பேச உரிமை உள்ளதாகவும் தாம் அம்னோவை பக்காத்தான் கூட்டணியில் சேர்க்க இப்போதைக்கு எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தாம் பிரதமரான பின்னர் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அமைச்சரவையில் நீடிக்க மாட்டார் என்றும் தமது புதல்வி நூருல் இஸ்ஸா அன்வாரின் நிலை பின்னர் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.