கோலாலம்பூர், செப். 17-
மலேசிய இந்தியர்கள் மாற்று வழிச் சிந்தனையில் செயல்பட வேண்டும். குறிப்பாக தங்களின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இணைய வர்த்தகத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென டிஜிட்டல் வர்த்தக மேம்பாட்டு சம்மேளனத்தின் தலைவர் எம்.வி.சேகர் வலியுறுத்தினார்.
இந்திய வர்த்தகர்களை இணையவர்த்தகத்தில் ஈடுபடுத்துவதற்கு சங்கம் பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செப்டம்பர் 26ஆம் தேதி டிஜிட்டல் வர்த்தக மேம்பாட்டுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புக்கிட் ஜாலில் புத்தாக்க தொழில்நுட்பம் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் இணைய வர்த்தக கண்காட்சி மாநாடு நடைபெறவிருப்பதாகக் கூறினார்.
இந்த மாநாட்டை பொறுத்தவரையில் மலேசிய இந்திய வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய பயனாக அமையுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த முறை இந்த மாநாட்டில் 100க்கும் அதிகமான பேராளர் கலந்து கொண்டார்கள். இம்முறை 300 பேருக்கு இதில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் சங்கர் தெரிவித்தார்.
இதில் கண்காட்சிக் கூடத்தை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம். ஆனால் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு விஐபி அழைப்பிதழைப் பெற்றிருப்பது அவசியமென்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு பலதரப்பட்ட் ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த ஆலோசனையானது அவர்களது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். குறிப்பாக இப்போது அனைத்து வர்த்தகங்களும் இணையம் வாயிலாகவே நடக்கின்றது. இப்போதே இந்த உருமாற்றத்திற்கு நாம் தயாராகி விட வேண்டும். இல்லையென்றால் கால ஓட்டத்தில் மேம்பாடு காணாத வர்த்தகர்கள் இத்துறையிலிருந்து காணாமல் போய்விடுவார்கள் என அவர் எச்சரித்தார்.
தற்போது உலக நாடுகள் அனைத்தும் தொழில்துறை 4.0ஐ நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி விட்டன. மலேசியாவும் அப்பாதையில் பயணிப்பதற்குத் தயாராகி விட்டது. அதில் இணைய வர்த்தகம்தான் முதலிடம் பிடித்துள்ளது. அதை நாம் அறிந்து செயல்பட வேண்டும். இன்னமும் பலருக்கு தொழில்துறை 4.0 என்றால் என்னவென்றே தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாநாடு நிச்சயம் மிகப் பெரிய பயனாக அமையும் என சங்கர் கூறினார்.
இந்த மாநாட்டில் வர்த்தகத் துறையில் பெண்கள் என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெறும். அதேபோல் வர்த்தக துறையில் இளைஞர்களுக்கான வாய்ப்பு மற்றும் சவால்கள் குறித்தும் பேசப்படும். இதனிடையே வர்த்தகத் துறையில் மேம்பாடு கண்ட வர்த்தகர்கள் தங்களின் அனுபவங்களையும் அவர்கள் சந்தித்த சவால்களையும் விளக்கிக் கூறுவார்கள்.
இந்த மாநாடு வர்த்தக ரீதியில் விழிப்புணர்வு மட்டுமின்றி, உறவையும் ஏற்படுத்தும். இந்த மாநாட்டில் பலதரப்பட்ட் வர்த்தகர்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது வர்த்தக மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பலனடைய வேண்டும். இதில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களுக்கு இணையத்தள முகவரி பதிவு செய்து தரப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு www.gosmvevents.com/midec18 இணையத்தள முகவரியில் தங்களை பதிந்து கொள்ளலாம். அல்லது 014−2534983 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.