கோலாலம்பூர், டிச. 23
கடந்த ஆறு வருடங்களாக ஷாஆலம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடந்துவந்த ராயல் இந்தியன் திருமண பெருவிழா இம்முறை கிள்ளான் ஹொக்கியான் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
எஸ் எஸ் ஸ்மார்ட் நிறுவனத்தின் கீழ் நடந்த இந்த ராயல் இந்தியன் திருமண பெருவிழா இம்முறை நிறுவன மாற்றம் கண்டு, வொன்டெஸ் வெட்டிங் ஸ்டூடியோவின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது என அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சிவா தெரிவித்தார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 62 திருமணம் சார்ந்த கூடாரங்கள் இந்த பெருவிழாவில் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்த பெருவிழாவில் பங்கேற்க 70 விழுக்காட்டினர் இந்த முறை இடமாற்றம் கண்டிருக்கும் புதிய இடத்தில் தங்களது கூடாரங்களை அமைத்து திருமணம் சார்ந்த விளக்கம் மற்றும் சேவைகளை வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 6 தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில் திருமணம் புரிய இருக்கும் இளம் தம்பதியர் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதோடு குறைந்த விலையில் பல சலுகைகளையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக எஸ்எஸ் ஸ்மார்ட் ஏற்பாட்டில் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இந்த திருமண பெருவிழா நடந்தது. இப்போது எஸ் எஸ் ஸ்மாட்டிற்குப் பதிலாக வொன்டெஸ் வெட்டிங் ஸ்டூடியோ ஏற்பாடு செய்திருக்கும் இந்த பெருவிழா இடமாற்றம் காணப்பட்டுள்ளதாக சிவா கூறினார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இந்த வர்த்தக பெருவிழாவில் இடம்பெறவிருக்கின்றது. திருமணத்திற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் பார்வையிடும் வகையில் இந்த வர்த்தக பெருவிழா அமைகின்றது. அதோடு திருமண அலங்கரிப்பு, திருமண அட்டை, திருமணத்திற்கு தேவையான பிரம்மாண்ட கூடாரம், மேக்கப், கார் என அத்தனை விஷயங்களையும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய திருமண பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
திருமணம் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபடும் மலேசியாவின் முதன்மை வர்த்தக நிறுவனங்கள் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு மலேசிய இந்தியர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் அதோடு சலுகைகளையும் வழங்கவிருப்பதாக தெரிவித்தார்,
இந்த திருமண வர்த்தக பெருவிழா மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக சிலரால் கூறப்படுவதில் உண்மை இல்லை. அங்கு நடக்கும் திருமண பெருவிழா, கடந்த ஆண்டு ஏற்பாடு செய்த நிறுவனமல்ல என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
6 ஆண்டுகளாக திருமண விழாவை நடத்தி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நமது நிறுவனம் இந்த முறையும் இந்த விழாவை நடத்துகிறார்கள். இது குறித்த அனைத்து தகவல்களையும் பொதுமக்களுக்கு வழங்கி விட்டோம். இடம் மாற்றம் கண்டது உண்மைதான். அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் பொதுமக்கள் கிள்ளான் ஹோக்கியான் மண்டபத்தில் நடக்கும் இந்த திருமண பெருவிழாவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என சிவா கேட்டுக் கொண்டார்.


