புத்ராஜெயா, டிச. 23
சர்வதேச நிலையில் 60 நாடுகளில் இருந்து 1,000 மாணவர்கள் மலேசியாவின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பல்வேறு துறைகளில் இளங்கலை துறையில் பட்டம் பெற்றனர்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் தங்களின் சிறந்த எதிர்காலத்திற்கு முதல் படியாக இந்த வெற்றியை பார்ப்பதாக பல்கலைக்கழகம் கூறியது. உலக அரங்கில் சிறந்த கல்வியை வழங்கும் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் இப்பல்கலைக் கழகத்தில் இருந்து இதுவரையில் 12 ஆயிரம் மாணவர்கள் பட்டதாரியாக உருவாகி உள்ளனர்.
புத்ராஜெயாவில் பி ஐ சி சி மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் என 1000க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு பிரமுகராக இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் மாண்புமிகு சுல்தானா பகாங், சுல்தானா ஹாஜ்ஜா டாக்டர் கல்ஸம், கலந்து கொண்டார்.
‘எதிர்கால உருவாக்கம் எனும் கருப்பொருளில் நடந்த இந்த பட்டமளிப்பு விழாவில் இப்பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த ஆற்றல் மிக்கவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக அதன் தோற்றுநர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ படுக்கா லிம் கோக் விங் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்களின் எதிர்காலம் எதைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உலகம் எந்த கல்விமுறையை சார்ந்து செயல்பட இருக்கின்றது என்பதை அறிந்து அதை தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இதை கடைபிடித்தால் நிச்சயமாக மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை கொண்டிருப்பார்கள் என அவர் கூறினார்.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என பல்கலைக்கழகத்தில் பயிலும் 80 விழுக்காடு மாணவர்கள் சர்வதேசத்தை சார்ந்தவர்கள். இதுதான் இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு அம்சமாகும். வெளிநாட்டு மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நமது பல்கலைக்கழகத்தை முதல் தேர்வாக கொண்டிருக்கின்றார்கள் என டான்ஸ்ரீ லிம் கோக் விங் தெரிவித்தார்.
தொழில் புரட்சி 4.0 நோக்கி உலக நாடுகள் பயணிக்க தொடங்கிவிட்டன. அதற்கு சிறந்த சிந்தனை ஆற்றல் கொண்ட இளைய சமுதாயம் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்டவர்களை உருவாக்கும் விதமாக இந்த பல்கலைக்கழகம் திகழ்கின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் உலக அரங்கில் மிகச்சிறந்த அடைவு நிலையை இப்போது பதிவு செய்து வருகிறார்கள். உலக பொருளாதாரத்தில் இவர்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.
இப்பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என பல்லாயிரம் மாணவர்கள், ஆசைப்படும் தருணத்தில் இப்பல்கலைக்கழகத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. புதிய கிளை பல்கலைக்கழகங்களை திறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் வேளையில் மாணவர்களின் சிந்தனை ஆற்றல் குறிப்பாக அவர்களை மேம்படுத்தும் இதர நடவடிக்கைகளையும் இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற 52 மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இளைய சமுதாயத்தை சிறந்த சிந்தனை ஆற்றல் கொண்ட சமுதாயமாக உருவாக குறிப்பாக திறன் மேம்பாடு கொண்டவர்களாக உருமாற்றம் செய்யவே இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் காலகட்டத்திலும் உலக அளவில் 14 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. அதில் 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். சைபர் ஜெயாவில் செயல்படும் இப்பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் 80 விழுக்காட்டினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


